2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜோ’ படத்தில் ஜோடியாக நடித்த ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ், தற்போது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் டீசரும் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரியோ ராஜ் பேசுகையில்: பெண்களின் பாவம் குறித்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், ஆண்களின் பக்கம் இருந்து கதையைக் கூறும் படம் எதுவும் இல்லை. அதனால் தான் ‘ஆண்பாவம் பொல்லாதது’ உருவானது. இது ஒரு முழு பொழுதுபோக்கு படம் என்றாலும், அதில் சில முக்கியமான சமூக பிரச்சனைகளையும் எடுத்துரைத்துள்ளோம். திருமணமான தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகளை ஆண்களின் கோணத்தில் இருந்து காட்டியுள்ளோம்.
மகளிர் காவல் நிலையம் சென்றாலே, ஆண்கள் ‘அக்யூஸ்ட்’, பெண்கள் ‘விக்டிம்’ என்று பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தையும் இப்படம் நியாயமான முறையில் பேசுகிறது. பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும். இது பெண்களுக்கு எதிரான படம் அல்ல, அதே சமயம் ஆண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. பெண்களை கவரும் வகையிலும், அவர்களின் பார்வையையும் வெளிப்படுத்தும் வகையிலும் பல காட்சிகள் உள்ளன. மாளவிகா மனோஜ் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் ஏ. வெங்கடேசும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் ஒரு பாடலை நானே எழுதியுள்ளேன். மேலும், இப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். இந்த நேரத்தில் என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மனைவிமார்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்; அவர்கள் கணவர்மீது அன்பு இன்னும் அதிகரிக்கும்,” என்று தெரிவித்தார்.
இயக்குநர் கலையரசன் கூறுகையில், “இந்த படத்தை எழுதும் போது பல உண்மையான வழக்குகளை (cases) படித்தோம். பல இடங்களில் ஆண்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பார்த்து, அதை வெளிக்கொணரும் விதமாக கதை உருவாக்கினோம். இப்படம் பார்த்த பிறகு மக்கள் ஆண்களைப் பார்ப்பது மாறும் என நம்புகிறேன். பாடல்கள் சிறப்பாகப் பேசப்படும். சென்சார் வாரியம் எந்த ‘கட்’ அல்லது ‘மியூட்’ இல்லாமல், 13 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கும் வகையில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள்,” என்றார்.

