கடந்த சில நாட்களாக தமிழ்ச் சினிமாத் துறையை சுழன்றடித்த விஷயம் ‘800’ திரைப்படத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வேடமேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பாரா.. மாட்டாரா என்பதுதான்.
இலங்கை இனப் படுகொலையை இதுவரையிலும் கண்டிக்காமலும், ராஜபக்சேவின் ஆட்சியையும், கட்சியையும் எப்போதும் உயர்த்தியே பேசி வரும் முத்தையா முரளிதரன் ஒரு ‘தமிழினத் துரோகி’ என்று தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இலங்கையில் இருக்கும் தமிழின அமைப்புகளும் கோபம் கொண்டுள்ளன.
இந்த நேரத்தில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவருக்கு அழகல்ல. பெருமையல்ல.. அவர் அதில் நடிக்கக் கூடாது. தமிழக மக்கள் அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்று அடையாளப் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.
அந்தப் பெயருக்கேற்றவாறு அவர் நடந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அவர் நடந்து கொள்ளக் கூடாது…” என்றெல்லாம் விஜய் சேதுபதி மீது கடும் கண்டனங்கள் கடந்த சில நாட்களாக ஒலித்துக் கொண்டிருந்தன.
ஆனால் விஜய் சேதுபதி இத்தனை கண்டன அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கும் பதில் சொல்லாமல் அமைதி காத்து வந்தார்.
இந்த நேரத்தில் முத்தையா முரளிதரன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அந்தச் செய்தியில் “விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் அவரது நடிப்பு கேரியரில் பிரச்சினை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டரில் நடிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தச் செய்தியை உடனடியாக தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்துள்ள விஜய் சேதுபதி, “நன்றி வணக்கம்” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
இதனால், முத்தையா முரளிதரனின் கோரிக்கையை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டு படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது..!