சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ராமன் பரசுராமன்’. நடிகர் சுரேஷின் தந்தையான கோபிநாத் இயக்கி தயாரித்த அந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவானது,
தெலுங்கு மொழியில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சோபன்பாபு. அவருக்கும், நடிகை ஜெயலலிதாவுக்கும் இருந்த உறவு வாசகர்கள் அறிந்ததே.
அந்தப் படத்துக்காக ஜப்பானில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிய அந்தப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் அந்தக் காட்சிகளை மட்டும் எடிட் செய்து தருமாறு நடிகர் ஜெயம் ரவியின் தந்தையான எடிட்டர் மோகனிடம் கேட்டுக் கொண்டார்.
எடிட்டிங் பணியில் அப்போது மிகவும் சிறந்தவராக விளங்கிய மோகன் அந்தச் சண்டைக் காட்சிகளை அவருக்காக மிக அழகாக எடிட் செய்து கொடுத்தார். அந்த சண்டைக் காட்சிகள் மிகச் சிறப்பாக அமையவே அதை எம்ஜிஆருக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த படத்தின் கதாநாயகனான நடிகர் சிவகுமார்.
எம்.ஜி.ஆர். அந்தச் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் அமைந்திருந்த தியேட்டருக்கு வந்தபோது அந்த சண்டைக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சோபன்பாபு எம்ஜிஆரை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு “இனி, உங்களுக்கு குறுக்கே எப்போதும் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.
இந்த தகவலை டூரிங் டாக்கீஸின் ‘சாய் வித் சித்ரா’ நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடிட்டர் மோகன்.