Friday, November 22, 2024

“காதல் ஓவியம்’ தோல்விக்குக் காரணம் ஜனகராஜ்தான்” – பாரதிராஜாவின் வருத்தம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணியில் இன்றைக்கும் முத்தான பாடல்களைக் கொண்ட திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘காதல் ஓவியம்’. கிளாஸிக்கல் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் வெளியானபோது படு தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வி எதனால் ஏற்பட்டது என்பது பற்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இது பற்றிப் பேசும்போது, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘சீத்தாகோகா சிலகா’ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான பின்பு அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது கதாசிரியர் கலைமணி இரண்டு வரிகளில் ஒரு கதையைச் சொன்னார். ஒரு பாடகனுக்கும், ஒரு ரசிகைக்குமான காதல் பற்றி. கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. உடனேயே இதையே படமாக்க நினைத்து டிஸ்கஷனுக்காக பெங்களூருக்கு சென்றோம்.

நான், கலைமணி, சித்ரா லட்சுமணன் மூவரும் பெங்களூர் போய் தங்கி டிஸ்கஷன் செய்து,கதையைத் தயார் செய்தோம். ‘படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு ராதாவையே போடலாம்’ என்று கலைமணி சொன்னார். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஹீரோவுக்கு கார்த்திக் வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஏனெனில் இது பாடல்கள் நிறைய உள்ள படம். அதனால் கார்த்திக் வேண்டாம் என்றாகிவிட்டது.

ஒரு நாள் தேனாம்பேட்டை வழியாக நான் காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு நேரெதிரில் இருந்த ‘ஜாமா லாட்ஜ்’ பக்கத்தில் இருந்த டீக்கடையில் ஒரு பையன் டீ குடித்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடன் எனக்குள் ஏதோ தோன்றியது.

உடனேயே காரை நிறுத்திவிட்டு எனது உதவியாளரை அனுப்பி அந்தப் பையனை அலுவலகத்திற்கு அழைத்தும்வரும்படி சொல்லிவிட்டுப் போனேன். சொன்னது போலவே அந்தப் பையனை அழைத்து வந்தார்கள்.

அவன் ஹிந்தி. ‘கொஞ்சம், கொஞ்சம் தமிழ்ல பேசுவேன்’னு சொன்னான். மொதல்ல ஸ்டில்ஸ் எடு்ப்போம். அப்புறம் பார்க்கலாம்ன்னு எடுத்துப் பார்த்தேன். கச்சிதமா இருந்துச்சு. அவனையே ஹீரோவா புக் பண்ணிட்டேன். அவனோட அண்ணன்கிட்ட மட்டும் சொல்லிட்டு ஷூட்டிங்கிற்கு வந்துட்டான். ஷூட்டிங்ல யார்கிட்டேயும் பேச மாட்டான். அமைதியா இருப்பான். வசனம், பாடல்கள் எல்லாத்தையும் இங்கிலீஷ்ல எழுதி வைச்சிட்டு படிப்பான். பேசுவான். அற்புதமா நடிச்சான். அவனை என்னால மறக்க முடியாது. ஆனால், அவனுக்கு சினிமா செட்டாகலை. அந்த ஒரே படத்தோட ஓடிட்டான்.

அந்தப் படத்துல ராதாவோட ஹஸ்பெண்ட் கேரக்டர் ஒண்ணு இருந்துச்சு. அதை யாருக்குக் கொடுக்கலாம்ன்னு யோசிச்சேன். அப்போ சட்டுன்னு ‘ஜனா’ ஞாபகத்துக்கு வந்தான். அந்த ‘ஜனா’தான் நம்ம ஜனகராஜ்.

நானும், இளையராஜாவும், கங்கை அமரனும் எல்டாம்ஸ் ரோட்டுல தங்கியிருந்தப்போ அதுக்கு எதிர் வீட்ல ஜனகராஜ் குடியிருந்தான். எங்க ரூமுக்கு அடிக்கடி வருவான். போவான். ‘டீ வாங்கிட்டு வாடா’ன்னா வாங்கிட்டு வருவான். நல்ல பையன். அவன் என் புள்ளை மாதிரி..!

அவனை நான் ‘புதிய வார்ப்புகள்’ படத்துல அறிமுகப்படுத்தியிருந்தேன். அப்படியே அவனும் ஒரு ரவுண்டு வந்துக்கிட்டிருந்தான். சரி.. இதுல அந்தக் கேரக்டர்ல இவனையே நடிக்க வைச்சிருவோம்ன்னு நினைச்சேன்.

ஆனால் பாருங்க.. அவன் அதுல நடிக்கவேயில்லைன்ற மாதிரியே.. அவனுக்குத் தெரியாமலேயே ஷூட் செஞ்சு எல்லாத்தையும் ரெடி செஞ்சுட்டேன். ‘நாளைக்கு டப்பிங் இருக்கு வாடா’ன்னு ஒரு நாள் கூப்பிட்டேன். ‘நான்தான் நடிக்கவே இல்லையே’ன்னான். ‘வெளக்கண்ண.. நீதான்டா அதுல நடிச்சிருக்க.. வந்திட்டுப் போ’ன்னு சொன்னேன். அவனுக்கு நாங்க தஞ்சாவூர் போய் ஷூட் பண்ணினதுகூட ஞாபகம் இல்லை. எப்படின்னே தெரியலை.. பட்.. அவனும் நல்ல பெர்பெக்ட் ஆர்ட்டிஸ்ட்.டுதான்.. நல்லா.. குறையே சொல்லாதபடிக்கு நடிச்சிருந்தான்.

கிளைமாக்ஸ் சீன்ல அந்த ‘சங்கீத ஜாதி முல்லை’ பாட்டு முடிந்த பின்னாடியும் ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரோட முகத்தை மட்டும் குளோஸப்ல எடுத்திட்டு வந்து இளையராஜாகிட்ட காண்பிச்சேன்.

‘என்னய்யா இது.. இப்படி எடுத்திருக்க.. இதை வைச்சு நான் என்ன செய்யுறது…?’ என்றான் இளையராஜா. ‘இதுக்கேத்தாப்புல இசையை போடு.. தத்தகாரம் தானா வரும்.. உன் இசையாச்சே’ன்னு சொன்னேன். மறுபேச்சில்லாமல் போட்டுக் கொடுத்தான். எஸ்.பி.பி. உயிரைக் கொடுத்து பாடிக் கொடுத்தான்.. அற்புதமாக இருந்தது. அந்த மாதிரி மியூஸிக் போடுறதுக்கு இளையராஜாவைவிட்டால் வேற யாருமே இல்லை.

இந்தப் படம் ரிலீஸானப்போ ரிசல்ட் எப்படியிருக்குன்னு பார்க்குறதுக்காக ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டருக்குப் போயிருந்தேன். ஆபரேட்டர் ரூம்ல இருந்தபடியே பார்த்தேன்.

இந்தப் படத்துல நான் எந்தெந்த காட்சியையெல்லாம் கவிதை மாதிரி செதுக்கியிருந்தனோ அந்தக் காட்சிகளின்போதெல்லாம் ரசிகர்களிடையே ஒரு சின்ன சலசலப்புகூட இல்லை. ரொம்ப ஏமாற்றமாகிப் போச்சு.. படம் பெயிலியர்ன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சு போச்சு..

அப்புறம்மேல் கேட்டப்போ எல்லாரும் சொன்ன ஒரே பதில்.. “எங்களோட கனவுக் கன்னி.. தேவதை மாதிரியிருக்குற ராதாவுக்கு ஜோடியா இப்படியொரு ஆளை போட்டிருக்கீங்களே.. இது அடுக்குமா.. நியாயமா”ன்னுதான்..! அதை நான் அப்ப யோசிக்கலை. ஆனால் இப்ப யோசிக்கிறேன்.

அந்தப் படம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், இப்போதும் என் பெயரைச் சொல்லும் படமாக அது இருக்கிறது. அது போதும் எனக்கு..!!!” என்று உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

- Advertisement -

Read more

Local News