சின்ன அண்ணாமலை என்ற பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் அவர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்ததுதான் நினைவுக்கு வரும்.
சின்ன அண்ணாமலை பன்முகத் திறமை கொண்ட மிகச் சிறந்த ஒரு திறமைசாலி. எழுத்தாளர், கதாசிரியர், மேடைப் பேச்சாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல துறைகளில் பெயர் பெற்று விளங்கிய அவர் கலையுலகில் பலரோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை தமிழிலே அறிமுகம் செய்தவர் இவர்தான் என்பது பலர் அறிந்திராத ஒரு செய்தி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அவர் அந்தப் படப்பிடிப்பின்போதுதான் எம். ஜி. ஆரோடு நெருங்கிப் பழகத் தொடங்கினார்.
சின்ன அண்ணாமலைக்கும் அரசியல் ஈடுபாடு உண்டென்பதால் ‘சக்ரவர்த்தி திருமகள்’ படப்பிடிப்பின் இடைவேளையில் சலிக்காமல் அவரோடு அரசியல் விவாதம் செய்வாராம் எம்.ஜி.ஆர்.
நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஒன்றாகவே உணவு அருந்துகின்ற அளவுக்கு அவர்கள் நட்பு வளர்ந்தது. சின்ன அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால், தன்னுடன் பழகுகின்ற எவரையும் மிக எளிதில் கவர்ந்துவிடக் கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகப் பழகவும், அவரோடு மனம் விட்டுப் பேசவும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அவர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டார்.
அப்போது சமூகப் படங்களில் நடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அது மட்டுமின்றி அவர் நடித்த சில சமூகப் படங்கள் மிகப் பெரிய தோல்விப் படங்களாக அமைந்தன. ஆகவே, சமூகப் படங்களில் நடிப்பது பற்றி சின்ன அண்ணாமலை கேட்டபோது “சந்தர்ப்பம் வந்தால், பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். சொல்லவில்லை என்றாலும் எதனால் அவர் சமூகப் படங்களைத தவிர்க்கிறார் என்பது சின்ன அண்ணாமலைக்குத் தெளிவாக தெரிந்து இருந்தது.
சமூகக் கதைக்கு ஏற்ற முகம் தனக்கு இல்லை என்றும் அதனால் கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்றும் எண்ணிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை இல்லை என்றால் தனது படம் ஓடாது என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் சமூகக் கதையில் நடிக்க பயப்படுகிறார் என்பது சின்ன அண்ணாமலைக்கு தெளிவாகப் புரிந்தது.
இதெல்லாம் தெளிவாக தெரிந்திருந்தும் “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் என்று கேட்டார் சின்ன அண்ணாமலை.
சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். “உங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்” என்று அவரிடம் சொன்னார்.
அப்போது தேவ் ஆனந்த் நடித்த ‘பாக்கெட் மார்’ என்ற இந்திப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்திருந்த சின்ன அண்ணாமலை, அந்த படத்தை எம்.ஜி.ஆருக்கு திரையிட்டுக் காட்டினார். அந்தப் படத்தின் கதை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் தமிழ்ப் பதிப்பில் நடிக்க தனது ஒப்புதலை அவர் தெரிவித்தார்.
மறுநாள் தனது பங்குதாரரான வி.அருணாசலம் செட்டியாருடன் சியாமளா ஸ்டூடியோவிற்கு சென்ற சின்ன அண்ணாமலை, மேக்கப் அறையில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து தனது பங்குதாரரை அறிமுகம் செய்துவிட்டு தானும் அவரும் ‘சாவித்திரி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கி இருப்பதாகவும் அதில்தான் எம்.ஜி.ஆர். நடிக்க இருக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் சொன்னார்.
அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., சின்ன அண்ணாமலையோடு அவருக்கு இருந்த நட்பு காரணமாக மிகக் குறைந்த சம்பளத்தில் அப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.
அதே நேரத்தில் அடுத்த ஆறு மாதத்திற்கு தனது கால்ஷீட்டுகளை எல்லாம் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாகச் சொன்ன அவர் சின்ன அண்ணாமலையின் படத்தை முடிக்க ஒரு குறுக்கு வழியையும் சொன்னார்.
“எல்லா தயாரிப்பளர்களுக்கும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். அதனால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை நமது படத்தின் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம்” என்று சொன்ன அவர் தன்னுடைய கால்ஷீட்டுக்கு ஒத்து வருகிற மாதிரி ஒரு நடிகையை கதாநாயகியாகப் போடும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறினார்.
“கதாநாயகி புதுமுகமாக இருந்தால் இன்னும் நல்லது. நம் வசதி போல் சூட்டிங்கை திட்டமிட்டுக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறினார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலகட்டத்தில் பி.ஆர்.பந்துலுவின் ‘பத்மினி பிக்சர்ஸ்’ தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் கதையை வித்வான் மா.லட்சுமணனுடன் இணைந்து எழுதியிருந்த சின்ன அண்ணாமலை அந்தப் படத்தின் திரைப்பட தயாரிப்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் சென்னை கடற்கரையில் சின்ன அண்ணாமலை தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கு இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்திருந்தார். சின்ன அண்ணாமலையை பத்மா சுப்ரமணியம் நன்கு அறிவார் என்பதால் அவர் அருகிலே அமர்ந்து பேசத் தொடங்கினார் அவர்.
பேச்சின் இடையே தான் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கும் `தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சின்ன அண்ணாமலை சொன்னவுடன் தன்னுடன் வந்திருந்த பெண்ணை சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் செய்து வைத்தார் பத்மா சுப்ரமணியம்.
“இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய் மொழி கன்னடம். ஒன்றிரண்டு கன்னடப் படத்தில் நடித்திருந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறாள். ஏதாவது ஒரு தமிழ்ப் படத்தில் இவருக்கு `சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று பத்மா கேட்டுக் கொள்ள ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ‘அழகு மோகினி’, ‘யவ்வன மோகினி’ என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாக இவரைப் போடலாம். எதற்கும் நான் பந்துலு அவர்களிடம் அது பற்றி பேசிவிட்டு சொல்கிறேன்” என்றார் சின்ன அண்ணாமலை.
பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்த போதிலும் அவர் முகம் கேமிராவுக்கு சரியாக இருக்கும் என்று சின்ன அண்ணாமலைக்கு தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைப பற்றி சொல்லி நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்கும் வாய்ப்பை அந்தப் பெண்ணிற்கு வாங்கித் தந்தார் அவர்.
‘அழகு மோகினி’, ‘யவ்வன மோகினி’ நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை அப்போது படம் பிடித்துக் கொண்டிருந்ததால், அந்த நடனக் காட்சியை டைரக்ட் செய்யும் பொறுப்பை ப.நீலகண்டனிடம் ஒப்படைத்திருந்தார் .
பத்மா சிபாரிசு செய்த அந்தப் பெண், மேக்கப் போட்டு அலங்காரம் எல்லாம் செய்து கொண்டு வந்து காமிரா முன் வந்து நின்றதும் காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், சின்ன அண்ணாமலையைத் தனியாகக் கூப்பிட்டார். “கேமிரா வழியாகப் பார்க்கும்போது இந்தப் பெண் ரொம்பவும் அழகாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அதனால், கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
பின்னர் படமாக்கப்பட்ட அந்த நடனக் காட்சியை தியேட்டரில் போட்டுப் பார்த்த போது வைத்த கண் வாங்காமல் எல்லோரும் அந்த நடிகையையே பார்த்தனர். அந்த அளவுக்கு அந்தப் பெண் மிகவும் அழகாக திரையில் காட்சி அளித்தார்.
அந்தப் பெண்தான் கோடான கோடி தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு காலக்கட்டத்தில் தங்களது தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக அமைந்த கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி..!
`தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த சம்பளம் 250 ரூபாய். பின்னர் அதே பந்துலு பின்னர் சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்தார் என்பது சினிமா வரலாறு.
டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார் சின்ன அண்ணாமலை. சம்பளம் எவ்வளவு தெரியுமா…? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.
எம்.ஜி.ஆர். அவர்களிடம் தான் ஒப்பந்தம் செய்து வைத்துள்ள சரோஜாதேவியை கதாநாயகியாகப் போடலாமா என்று சின்ன அண்ணாமலை கேட்டபோது “எதற்கும் முதலில் ஒரு `டெஸ்ட்’ எடுங்கள்.. பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்” என்றார் எம்.ஜி.ஆர்.
சிட்டாடல் ஸ்டூடியோவில் சரோஜாதேவிக்கு `டெஸ்ட்’ எடுக்கப்பட்டது. அந்த டெஸ்ட்டில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார் தெரியுமா…? கதாசிரியர் மா.லட்சுமணன். சரியாகச் சொல்வதென்றால் தமிழில் சரோஜாதேவியின் முதல் திரைக் கதாநாயகன் மா.லட்சுமணன்தான்.
`டெஸ்டை’ எம்.ஜி.ஆர். பார்த்தார். அவருக்கு சரோஜாதேவியின் தோற்றம் பிடித்திருந்தது. அப்போது அவருடன் படம் பார்த்த சிலர் சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலைத் தாங்கித் தாங்கி நடந்து சென்றதை அவரிடம் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை “அதுவும் ஒரு மாதிரி `செக்ஸி’யாகத்தான் இருக்கிறது” என்று சொன்ன அவர் “இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்” என்று சின்ன அண்ணாமலையிடம் சொன்னார்.
அந்தப் படத்தை இயக்குகின்ற பொறுப்பை தனது நண்பரும் சரோஜாதேவியின் எதிர்காலத்தைப் பற்றி மிகச் சரியாக கணித்தவருமான ப.நீலகண்டனிடம் ஒப்படைத்தார் சின்ன அண்ணாமலை. அவருடைய இன்னொரு நண்பரான ஏ.எல்.சீனிவாசன் அந்தப் படத்தின் ‘நெகடிவ்’ உரிமையை வாங்கிக் கொள்ள முன் வந்தார்.
படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்தபோது “லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போன்று நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயரும் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். ஏராளமாக பணம் செலவு செய்து `போஸ்டர்’ ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு ஒரு பலன் கிடைக்கும்” என்று சொன்ன எம்.ஜி.ஆர் “அப்படிப்பட்ட ஒரு நல்ல பெயரைப் யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு” என்று அறிவித்தார்.
அவர் இப்படி சொன்னவுடன் படக் குழுவைச் சேர்ந்த எல்லோரும் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்யத் தொடங்கினார்கள். பல பெயர்களைச் சொன்னார்கள். அந்த பெயர்களில் இருந்து கதாசிரியர் மா.லட்சுமணன் சொன்ன ‘திருடாதே’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் கதாசிரியர் மா.லட்சுமணனுக்கு 500 ரூபாயை பரிசாகக் கொடுத்தார்.
‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ‘இன்பக் கனவு’ நாடகத்தில் நடிப்பதற்காக சீர்காழி சென்ற எம்.ஜி.ஆர் அந்த நாடகத்திலே நடித்தபோது ஒரு விபத்தை சந்திக்க வேண்டி வந்தது. அதன் காரணமாக கால் ஒடிந்து படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை தினமும் போய் பார்த்து பேசிவிட்டு வந்தார் சின்ன அண்ணாமலை.
ஒரு நாள் அப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது “என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியவில்லை. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது நீங்கள் வாங்கியிருக்கும் கடன்களுக்கும் வட்டி அதிகமாக ஏறிக் கொண்டே போகும். அதனால் படத்தை ஏ.எல்.எஸ்.ஸிடமே கொடுத்து விடுங்கள். அவரிடம் உங்களுக்கு லாபமாக ஒரு நல்ல தொகையை தரச் சொல்லுகிறேன்…” என்றார் எம்.ஜி.ஆர்.
அதன் பின்னர் ‘திருடாதே’ படம் ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்து மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்துக்கு வித்திட்டவரும் ‘சரோஜா தேவி’ என்ற தேவதையை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவரும் சின்ன அண்ணாமலைதான் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போனாலும் சரோஜா தேவிக்கு அவைகள் எல்லாம் தெரியும் என்பதால் `திருடாதே’ படத்தின் நூறாவது நாள் அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப் பழங்களுடன் சின்ன அண்ணாமலையைப் பார்க்க வந்த அவர் அவர் காலில் விழுந்து வணங்கி அவரது ஆசியைப் பெற்றுச் சென்றார்.
மீடியாக்களின் முழு வெளிச்சமும் படாமல் இப்படி எத்தனையோ சாதனையாளர்கள் திரையுலகில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர்தான் சின்ன அண்ணாமலை.