Friday, November 22, 2024

வித்தியாசமான அனுபவங்களைத் தரும் கொரோனா காலத்திய படப்பிடிப்புகள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.

சுந்தர்.சி,யின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.

இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்குமனு, யோகிபாபு, ரித்திகா சென், ஸ்ருதி  மராத்தே  ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு  அருகிலுள்ளது.

26-வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு அனுபவம் பற்றி அஸ்வின் காக்குமனு பேசும்போது, ”இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. வழக்கமாக பட செட்டில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கை குலுக்கி கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வோம். இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அரசின் பாதுகாப்பு முறைகளோடு நடக்கிறது. முதலில் வெப்ப சோதனை நடத்துவதில் இருந்து கிருமி நாசினி பயன்படுத்துவதுவரை எல்லாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சுந்தர்.சி சார் வந்தார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி ஊக்கப்படுத்தினார். பிரசன்னாவுடன் பேசியது நல்ல அனுபவமாக இருந்தது .அவர் தனது திரை வாழ்க்கையைப் பற்றியும் அதில் அவர் கற்ற பாடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

யோகி பாபு அனைவருடனும் ஜாலியாக பேசி படப்பிடிப்புத் தளத்தைக் கலகலப்பாக மாற்றினார். சரியான சமூக இடைவெளியுடன் பழக வேண்டி இருந்ததால்  தள்ளி நின்று பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பழகினோம்…” எனறார்.

கதைப்படி கதாநாயகியின் வீட்டில் நடப்பதாக ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
நாயகியாக நடிக்கும் ரித்திகா சென் அன்றுதான் முதல் நாளாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.

அவர் தனது படப்பிடிப்பு அனுபவம் பற்றி பேசும் போது, “முதலில் எனக்குப் பயமாக இருந்தது. இந்தச் சூழலுக்கு பொருந்துவது கடினமாக  இருந்தது. ஆனால், போகப் போக எல்லாம் சரியாகி விட்டது. அந்த சமூக இடைவெளி என்கிற அந்த அசௌகரியத்தை உணர முடியாதபடி அனைவரும் நல்ல ஒத்துழைப்போடு படப்பிடிப்பு நடத்தினார்கள். எனவே, முதலில் பயந்திருந்த நான் மெல்ல மெல்ல அந்த சூழலோடு ஒன்றிவிட்டேன்…” என்கிறார்.

யோகி பாபு பேசும்போது, “அண்ணன் சுந்தர்.சி எனது குடும்ப நண்பர் போன்றவர். அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு. அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். கதையெல்லாம் கேட்க மாட்டேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்து விட்டேன். பிறகு வந்து கதையைக்  கேட்டபோது அருமையான கதையாக இருந்தது..” என்றார்.

இயக்குநர் பத்ரி  பேசும்போது, ”குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு  படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும், அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம்.

இதற்குக் காரணம் சுந்தர்.சி சார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்த திட்டமிடலும் சரியான நேரம் பராமரிப்பதும்தான். அதுமட்டுமல்லாமல் படக் குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்று 26-வது நாள். எல்லாவற்றையும்விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லா சிரமங்களையும், அசௌகர்யங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்..” என்கிறார்.

26-வது நாளான அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு நள்ளிரவு 2 மணிவரை தொடர்ந்து  முடிவடைந்தது.

செப்டம்பரில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News