ஜி.பாலசுப்ரமணியம் என்பவர் மிகச் சிறந்த கதாசிரியர். சிவாஜி நடித்த ‘அன்னை இல்லம்’, ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, எம்.ஜி.ஆர்.நடித்த ‘கலங்கரை விளக்கம்’, ‘ரகசிய போலிஸ் 115’, ‘தாழம்பூ’, உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய அவர், ஒரு நாள் பிரபல இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க வந்தார்.
தனக்கு மிகவும் அவசரமாக மூவாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறிய அவர் அதற்குப் பதிலாக தான் ஒரு கதை எழுதித் தருவதாகக் கூறினார்.
அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கதைக் கருவை கூறிய அவர் ஏழைகள் முகத்தில் விழிப்பதே பாவம் என்கின்ற அளவிற்கு ஏழைகளை வெறுக்கக் கூடிய ஒரு பணக்காரியை மையமாக வைத்து சில காட்சிகளையும் சொன்னார்.
அவர் சொன்ன அந்த திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மிகவும் கவர்ந்தது. ஆகவே “நீங்கள் எனக்கு புதிதாக வேறு கதை எழுதித் தர வேண்டாம்.. இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அந்த பாத்திரத்தை மையமாக வைத்து நான் ஒரு கதையைத் தயார் செய்து கொள்கிறேன்…” என்று அவரிடம் சொன்ன கோபாலகிருஷ்ணன் அந்த பணக்காரியின் பாத்திரத்தைப் பற்றியே அடுத்த பத்து நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை உருவாக்கிய பிறகு அந்தக் கதைக்கான கருவைத் தந்த ஜி.பாலசுப்ரமணியத்தை அழைத்து அந்தக் கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட அவர் கதை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து அவருடன் இடைவிடாமல் ஒரு மாதம் விவாதித்து திரைக்கதை வசனம் ஆகியவைகளை எழுதி முடித்த கோபாலகிருஷ்ணன் அடுத்து தனது காரியாலயத்திற்கு ஒரு நாள் தற்செயலாக வந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் அந்தக் கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட கண்ணதாசன் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று சொன்னவுடன் நம்பிக்கையோடு நடிகர்கள் தேர்வில் இறங்கினார் கே.எஸ்.ஜி.
நாயகன், நாயகி பாத்திரத்திற்கு ஜெமினி கணேசன், சரோஜா தேவி ஆகியோரை ஒப்பந்தம் செய்த கே.எஸ்.ஜி., படத்தின் அச்சாணி போன்ற திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரத்திற்கு எடுப்பான தோற்றமும், எடுத்தெறிந்து பேசும் குணமும் கொண்ட எஸ்.வரலட்சுமியை தேர்வு செய்தார்.
அடுத்தது அவரது கணவனின் பாத்திரம். கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்தவரை அப்பா வேடம் என்றால் அவர் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யக் கூடிய ஒரே நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்தான். ஆனால் இந்தப் படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக ரங்காராவ் அவர்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வரலட்சுமிக்கு அப்பா மாதிரிதான் அவர் தெரிந்தாரே தவிர, கணவன் மாதிரி தெரியவில்லை. ஆகவே, டி.கே.பகவதி அவர்களை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் கோபாலகிருஷ்ணன்.
ஜெமினி, சரோஜாதேவி, எஸ்.வரலட்சுமி டி.கே.பகவதி, நாகேஷ் ஆகியோரின் புகைப்படங்களைப் போட்டு ‘பணமா பாசமா’ என்ற பெயரில் புதிய படத்தின் விளம்பரத்தை பத்திரிகையில் வெளியிட்டார் கே.எஸ்.ஜி.

அந்த விளம்பரம் வந்த அன்று காலை முதலே கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்தில் டெலிபோன் மணி ஓயாமல் அடிக்க ஆரம்பித்தது.
போனில் பேசிய ஒருவர், “உனக்கென்ன மூளைக் கோளாறு ஏதாவது ஏற்பட்டுவிட்டதா..? சரோஜாதேவிக்கு கல்யாணம் ஆன உடனேயே அவரது மார்க்கெட் போய்விட்டது. அவரைப் போய் கதாநாயகியாகப் போட்டு படம் எடுக்கிறாயே…” என்றார்.
இன்னொருவரோ “முதல் வேலையாக இந்த நடிகர்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு வேற நடிகர்களை போட்டு படம் எடு…” என்றார்.
அடுத்து போனில் பேசிய ஒரு விநியோகஸ்தர், “வரலட்சுமி பகவதி இவங்களை எல்லாம் யாருக்குத் தெரியும்..? ‘சித்தி’ படம் ஓடிவிட்டதால் நீ யாரைப் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் படம் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேள்வி கேட்டதோடு நிற்காமல் “நிச்சயம் இந்தப் படம் படுதோல்விதான்” என்று ஆசீர்வாதமும் செய்தார்.
ஆனால், இந்த விமர்சனங்களால் எந்த பாதிப்பும் அடையாமல் யாரை ஒப்பந்தம் செய்திருந்தாரோ அவர்களை வைத்தே நம்பிக்கையோடு படப்பிடிப்பைத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன்.
ஆனால், அவரது நம்பிக்கையை குலைக்கின்ற மாதிரி ஒரு நிகழ்ச்சி முதல் நாள் படப்பிடிப்பில் நடைபெற்றது.
அப்படி ஒரு சோதனையை கோபாலகிருஷ்ணன் அதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பணமா பாசமா’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு எந்தக் கதாபாத்திரம் காரணமாக அமையப் போகிறது என்று கோபாலகிருஷ்ணன் எண்ணிக் கொண்டிருந்தாரோ… அந்த திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரத்தில் நடித்த எஸ்.வரலட்சுமி எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டை போல நடித்துக் கொண்டிருந்தார்.

பல படங்களில் நல்ல நல்ல பாத்திரங்களில் எல்லாம் நடித்த அவர் அப்படி நடித்தது கோபாலகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல… அவருடன் நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.
அவர் படங்களில் நடித்து சில வருடங்கள் ஆகியிருந்ததால் தொடர்பு விட்டிருக்க வேண்டும் என்று எண்ணிய கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து நடித்தால் தான் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்து விடுவாரென எதிர்பார்த்து அவரால் முடிந்த அளவு வரலட்சுமி எப்படி நடிக்க வேண்டுமென்று நடித்துக் காண்பித்தார்.
ஆனால், வரலட்சுமியால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நடித்துக் காட்டியதில் பத்து சதவிகிதம்கூட நடிக்க முடியவில்லை. அந்தக் கதாப்பாத்திரம் தோல்வி அடைந்தால் மொத்த படமும் தோல்வியடையும் என்பதை அறிந்திருந்த மற்ற நட்சத்திரங்கள் நன்றாக யோசித்து ஒரு முடிவெடுங்கள் என்று கோபாலகிருஷ்ணனிடம் நாசுக்காக சொன்னார்கள்.
இனியும் வரலட்சுமியோடு போராடி அவரை நடிக்க வைக்க முடியாது என்ற முடிவுக்கு கோபாலகிருஷ்ணனும் வந்துவிட்டிருந்ததால் அந்த பாத்திரத்திற்கு வேறு நடிகையைப் போடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
ஆனால், ஆணவமும் அழுத்தமும் கொண்ட அந்த பாத்திரப்படைப்பில் நடிக்கக் கூடிய இன்னொரு நடிகை யார் என்பதைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப யோசித்ததில் சாவித்திரி அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தால் அந்தப் பாத்திரம் தான் எதிர்பார்க்கின்ற வெற்றியை நிச்சயம் அடையும் என்ற முடிவுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் நேராக சாவித்திரியின் வீட்டுக்கு சென்றார்.
‘பணமா பாசமா’ படத்தில் வரலட்சுமியின் பாத்திரம் என்ன என்பதை விளக்கி விட்டு வரலட்சுமியால் ஒரு பத்து சதவிகிதம்கூட தான் எதிர்பார்த்த மாதிரி நடிக்க முடியவில்லை என்பதை சாவித்திரியிடம் சொன்ன கோபாலகிருஷ்ணன் “எப்படியாவது நீ அந்தப் பாத்திரத்தில் நடித்து என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று சாவித்திரியிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.

கோபாலகிருஷ்ணன் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட சாவித்திரி “நீங்க சொல்றது எல்லாம் சரிதான் வாத்யாரே. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டிங்களே..” என்றார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை எப்போதும் ‘வாத்தியாரே’ என்றுதான் கூப்பிடுவார் சாவித்திரி.
எதை மறந்து விட்டேன் என்பது போல கோபாலகிருஷ்ணன் சாவித்திரி முகத்தைப் பார்க்க “உங்க படத்தில் வரலட்சுமியின் மகளான சரோஜாதேவிக்கு ஜோடியா நடிக்கிறது யாரு..? என் கணவரான ஜெமினி கணேசன்.. இப்ப சொல்லுங்க. நிஜ வாழ்க்கையில் அவருக்கு மனைவியாக உள்ள நான் படத்தில் அவருக்கு மாமியாராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா..?” என்று நியாயமான ஒரு கேள்வியை சாவித்திரி எழுப்பியபோதுதான் உணர்ச்சி வேகத்தில் எப்படிப்பட்ட தவறை செய்ய இருந்தோம் என்பது கோபாலகிருஷ்ணனுக்கு புரிந்தது.
இனி அந்த பாத்திரத்திற்கு யாரை ஒப்பந்தம் செய்வது எப்படி படத்தை முடிப்பது என்று எண்ணியபோது அவர் தலை கிர்ர்ரென்று சுற்றியது
அப்போது சாவித்திரி அவரிடம் “எஸ்.வரலட்சுமி மிகச் சிறந்த நடிகை. எந்தக் கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை ஏற்கனவே பல படங்களில் அவர் நிரூபித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் பாடகி என்பதால் முக பாவங்கள் மிக எளிதாக மாறும். அவர் ஏதாவது பிரச்னையில் இருக்காரோ என்னவோ… அதனால்கூட அவரால் இன்று நடிக்க முடியாமல் போயிருக்கலாம். அதனால நீங்க விட்டுக்கு போய் இன்னிக்கு நிம்மதியா தூங்குங்க. நாளை காலையிலும் வரலட்சுமி நீங்க எதிர்பார்க்கிறபடி நடிக்கலேன்னா அவரை மாற்றி விடுங்கள். அவரை மாற்றுவதோடு ஜெமினியையும் மாற்றிவிடுங்கள்; வரலட்சுமி பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்..” என்றார்.
ஜெமினியின் கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பை ஜெமினியிடமே விட்டு விடுவோம் என்று சாவித்திரி சொன்னதில் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டதால் விட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தார் கோபாலகிருஷ்ணன்.
படுத்தாரே தவிர தூக்கம் வந்ததா என்றால் இல்லை. இரவு பதினோரு மணிவரை படுக்கையில் புரண்டு கொண்டிருந்த அவர் எதற்கும் வரலட்சுமியைப் போய்ப் பார்த்து பேசி அவரை அந்தப் பாத்திரத்திற்கு மீண்டும் தயார் செய்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் எஸ்.வரலட்சுமி விட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போனார்.
இவர் அவரது வீட்டு வாசலுக்குப் போகும்போது எஸ்.வரலட்சுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் சாவித்திரி. கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும் “வாத்தியாரே, நெருப்பு மாதிரி வரலட்சுமியைத் தயார் பண்ணிவிட்டு வந்திருக்கிறேன். நாளைக்கு படப்பிடிப்பில் அவர் எப்படி தூள் கிளப்புகிறார் என்று பாருங்கள். கவலைப்படாமல் வீட்டுக்கு போய் தூங்குங்க..” என்றார்.

மறுநாள் காலையில் படப்படிப்பிற்கு வந்த வரலட்சுமி உண்மையாகவே நெருப்பு மாதரிதான் இருந்தார். கோபாலகிருஷ்ணன் என்ன எதிர்பார்த்தாரோ அதைவிட பல மடங்கு சிறப்பாக நடித்து அந்த அந்த செட்டிலிருந்த அனைவரது பாராட்டையும் பெற்றார் அவர்.
அவர் நடிக்க, நடிக்க சாவித்திரியின் பெருந்தன்மையை நினைத்து மனம் உருகிப் போனார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
தான் நடிக்காத ஒரு படத்திலே, ஒரு நடிகை சிறப்பாக நடிக்கவில்லை என்பதற்காக அவரது வீட்டுக்கு போய் ஏறக்குறைய நான்கு மணி நேரம் அவரோடு இருந்து அவரை அந்தப் பாத்திரத்துக்கு தயார் செய்வது என்றால் அதற்கு எப்படிப்பட்ட பெரிய மனது வேண்டும்..?
கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாவித்திரிக்குப் பிறகு அப்படி ஒரு பெருந்தன்மையான நடிகையை இன்றுவரை தமிழ்த் திரையுலகம் சந்தித்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்பதைத் தவிர வேறு என்ன பதில் சொல்ல முடியும்…?