சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திக் கொண்டிருந்த ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றபோதுதான், அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது.
சேலத்திலே தங்கி இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டத்திற்குப் போனார் கண்ணதாசன். நாவலர் பேசிய பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது.
அதற்குப் பிறகு நேரடியாக இல்லை என்றாலும் ஒரு விதத்தில் ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் கண்ணதாசன் தனது வேலையை இழப்பதற்கும், பின்னர் அந்தப் பத்திரிகையே மூடப்படுவதற்கும் நெடுஞ்செழியனே காரணமாக அமைந்தார்.
நாவலர் நெடுஞ்செழியன் எழுதி ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்த கட்டுரை கண்ணதாசனை மிகவும் கவர்ந்ததால் அதை ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ய விரும்பிய அவர் அச்சுக் கோப்பவரிடம் அந்த கட்டுரையை வெட்டிக் கொடுத்து அச்சு கோர்க்கச் சொன்னார்.
‘சண்ட மாருதம்’ பத்திரிகையின் நிர்வாகியாக இருந்தவருக்கு நாவலரின் அந்த கட்டுரையை ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் பிரசுரிப்பதில் உடன்பாடில்லை. ஆகவே அந்தக் கட்டுரையை பிரசுரிக்கக் கூடாது என்றார் அவர். பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கண்ணதாசனுக்கு தனது உரிமையில் தேவையில்லாமல் அந்த நிர்வாகி மூக்கை நுழைப்பதாகத் தோன்றியது.
ஆகவே, அதற்கு மேலும் அந்த பத்திரிகையில் நீடிக்க விரும்பாத அவர் உடனடியாக ஒரு ராஜினாமா கடித்ததை எழுதி மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரான டி.ஆர்.சுந்தரத்தின் மேஜை மீது வைத்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரைக்கும் யார் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்தாலும் அவர்களை அழைத்து “ஏன் ராஜினாமா செய்கிறீர்கள்?” என்று கேட்கும் பழக்கமோ அல்லது வெளியே போகிறேன் என்று கூறுபவர்களை சமாதானப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருக்கச் செய்யும் பழக்கமோ மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளியான டி.ஆர்.சுந்தரத்துக்கு எப்போதுமே இருந்தததில்லை.
ராஜினாமா கடிதம் தரப்பட்டால் உடனே அதை வாங்கிக் கொண்டு கணக்கைத் தீர்த்து அனுப்பச் சொல்வதுதான் டி.ஆர்.சுந்தரத்தின் வழக்கம். ஆனால், கண்ணதாசன் விஷயத்தில் டி. ஆர்.சுந்தரம் அப்படி நடந்து கொள்ளவில்லை.
என்ன காரணத்தாலோ முதல் சந்திப்பிலேயே கண்ணதாசனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் ராஜினாமா கடிதம் கொடுத்த அவரை கணக்குத் தீர்த்து அனுப்பாமல் தன்னை சந்திக்க வரும்படி அவருக்கு சொல்லி அனுப்பினார் அவர்.
கண்ணதாசன் அவரைச் சந்தித்தபோது “போகத்தான் போகிறாயா?” என்று அவர் கேட்டதும் கண்ணதாசனால் “ஆமாம்” என்று உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவர் மீது டி,ஆர்.சுந்தரம் காட்டிய அன்பும், பாசமும்தான் அப்படி பதில் சொல்லவிடாமல் கண்ணதாசனை கட்டிப் போட்டது. ஒரு விதமான தயக்கத்துடன் மவுனமாக நின்று கொண்டிருந்தார் அவர்,
“உனக்குப் பத்திரிகை வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் விடு. பத்திரிகையை மூடி விடுவோம். நீ நமது சினிமா கதை இலாகாவிலே சேர்ந்துவிடு…” என்றார் டி.ஆர்.எஸ்.
அவர் அப்படி சொன்னதைக் கேட்டதும கண்ணதாசன் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை. மகிழ்ச்சியோடு அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனடியாக ‘சண்ட மாருதம்’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டது.
கண்ணதாசன் கதை இலாகாவில் சேர்ந்தார். அவரது சம்பளமும் முப்பது ரூபாய் உயர்ந்தது. திரைக்கதைக்கான தொழில் நுணுக்க வார்த்தைகள் பலவற்றை அங்கேதான் கண்ணதாசன் கற்றுக் கொண்டார்.
திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத கண்ணதாசனுக்கு பயிற்சிக் களம் அமைத்துத் தந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான். எம்.ஜி.ஆர்., கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.சக்ரபாணி, ஜி.ஆர்.நாதன் என்று பல நண்பர்களை கண்ணதாசனுக்கு பெற்றுத் தந்தது.
அந்த நண்பர்கள் பட்டியலில் கண்ணதாசனுக்கு முதலில் அறிமுகமானவர் எம்.ஜி.சக்ரபாணிதான். அவர் அப்போது மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மாடர்ன் தியேட்டர்சில் நிரந்தர நடிகராக இருந்த எம்.ஜி.சக்ரபாணி அப்போது கோயம்பத்தூர் லாட்ஜ் என்ற உணவு விடுதியில் தங்கியிருந்தார். அவரோடு இரவு வெகு நேரம்வரை பேசிக் கொண்டிருப்பது கண்ணதாசனின் வழக்கம். அப்படி அவரோடு பேசிக் கொண்டிருந்தபோதுதான் கருணாநிதி என்ற பெயர் கண்ணதாசனுக்கு அறிமுகமாயிற்று. கருணாநிதியின் வசனம் எழுதும் ஆற்றல் பற்றி அடிக்கடி கண்ணதாசனிடம் சொல்வார் சக்ரபாணி.
கருணாநிதி வசனம் எழுதிய ‘அபிமன்யு’ படம் சேலத்திலே உள்ள அம்பிகா தியேட்டரில் வெளியானபோது அந்தப் படத்தைப் பார்க்க கண்ணதாசனை அழைத்துச் சென்றவர் சக்கரபாணிதான்.
அந்தப் படத்தில் கலைஞர் கருணாநிதி எழுதியிருந்த வசனங்களைக் கேட்டு மிரண்டு போனார் கண்ணதாசன். “அப்படி ஒரு சொல்லாட்சியை அதுவரை எந்தத் திரைப்படத்திலும் தான் கண்டதில்லை” என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்’
‘ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’
‘அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’
‘அர்ச்சுனனால் கூடத் துளைக்க முடியாத சக்ர வியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியரின் விபீஷண வேலை’
போன்ற அந்த படத்தின் வசனங்கள் கண்ணதாசனின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தன.
தொடர்ந்து ஆறு நாட்கள் அந்தப் படத்தைப் பார்த்தார் கண்ணதாசன். அதற்கு முன்னரும் சரி.. பின்னரும் சரி.. கண்ணதாசன் அப்படி எந்தத் திரைப்படத்தையும் திரும்பத் திரும்ப பார்த்ததேயில்லை.
கருணாநிதியின் வசனங்கள் மீது அவருக்கு ஏற்பட்ட காதல் காரணமாக நாளடைவில் ‘கருணாநிதி’ என்ற பெயரையே காதலிக்கத் தொடங்கினார் கண்ணதாசன். அதைத் தொடர்ந்து கருணாநிதியை எப்படியாவது சந்திக்க வேண்டும், அவரோடு பேச வேண்டும் என்ற ஆவல் அவருக்குப் பிறந்தது.
அவருடைய அந்த ஆசை நிறைவேறுகின்ற சூழல் ‘மந்திரி குமாரி’ நாடகம் மூலம் வந்தது.
‘குண்டலகேசி’ காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘மந்திரி குமாரி’ என்ற நாடகத்தை எழுதினார் கலைஞர். கும்பகோணத்திலே அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல நாட்கள் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட அந்த நாடகத்தைப் பற்றி கவிஞர் கா.மு.செரீப், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரத்திடம் கூற டி.ஆர்.சுந்தரம், இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் ஆகிய இருவரும் கும்பகோணம் சென்று அந்த நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.
அதைத் தொடர்ந்து கலைஞரை சந்தித்து அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமைகளை வாங்கி வருவதற்காக கா.மு.செரீப்பை திருவாரூருக்கு அனுப்பி வைத்தார் டி. ஆர். எஸ்.
மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்ற வந்த கலைஞரை கோயம்பத்தூர் லாட்ஜில்தான் முதன்முதலில் சந்தித்தார் கண்ணதாசன். எம்.ஜி.சக்கரபாணி கலைஞரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது தனது காதலியைப் பார்ப்பது போல ஒரு பரவசத்துடன் அவரைப் பார்த்தார் கண்ணதாசன்.
அந்த முதல் சந்திப்பு அனுபவம் குறித்து தனது ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் முதல் பாகத்தில் கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.
“மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் 1949-ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளனாக அமர்ந்தேன். அங்கே செரீபுடன் மருதகாசி என்ற நண்பரும் பாட்டு எழுதிக் கொண்டிருந்தார்.
அந்தப் பட நிலையத்திற்கு ஒத்திகைக் கூடம் என்றொரு இடம் உண்டு.அங்கே சில கதாசிரியர்களும், பாடலாசிரியர்களும் இசைத் துறையினரும், நடிகர்களும் தங்கியிருந்தனர். நான் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். ஒத்திகைக் கூடத்தில்தான் கதை பற்றிய விவாதங்கள், பாட்டமைத்தல், இசையமைப்பு இவையாவும் நடைபெறும்.
எம்.ஜி.சக்ரபாணியும், கா.மு.செரீப்பும் ஒரு நாள் அங்கே ஒரு நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். வளர்ந்த உருவம், நெற்றி முழுவதும் திருநீற்றுப் பூச்சு. அவரைப் பார்த்த உடனேயே அவர் முகத்தில் ‘இவர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்’ என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்ததை நான் புரிந்து கொண்டேன். அந்த நண்பர்தான் மிகுந்த கவித்திறன் பெற்றவராக விளங்கும் கண்ணதாசன்” என்று அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.
சந்தித்த கணம் முதல் கலைஞரை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கிய கண்ணதாசன் ‘ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரு நண்பர்களிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது. ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகின்ற அளவுக்கு பாசத்தை வளர்த்துக் கொண்ட அவர்கள் இருவருக்கும் நடுவே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தாலும், அதை எல்லாம் தாண்டிய ஒரு பிணைப்பு அவர்கள் இருவருக்குமிடையே இருந்தது என்றால்.. அதற்குக் காரணம் அவர்கள் நட்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய நட்பாக இருந்ததுதான்.