இந்தக் கொரோனா காலத்திய லாக்டவுனால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தயாரித்து வெளியாகும் நிலையில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகாத சூழலில் சிக்கித் தவிக்கின்றன.
இவைகளில் பெரிய பட்ஜெட் படங்கள் சிலவை ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. தியேட்டர் உரிமையாளர்கள் இவைகள் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் தங்களது பொருளாதாரச் சுமை காரணமாகவே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.
இதனை தொடர்ந்து செய்தால் தியேட்டர்களை திறந்தாலும் மக்கள் கூட்டம் வராதே என்று தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த ஓ.டி.டி. தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது கருத்து தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது. நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும். திரையரங்கு சென்று படம் பார்த்தால்தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும்…” என்றார்.
மேலும், “இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யும்..” எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.