தமிழக அரசின் மானியம் பெறும் தகுதியுடைய திரைப்படங்களை தேர்வு செய்யும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய திரைப்படங்களை வரும் அக்டோபர் 29-ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வருடந்தோறும் 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2015, 2016, 2017-ம் ஆண்டுகளுக்குரிய குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தகுதியுடைய திரைப்படங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஏ.குலசேகரன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டிதான் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை பார்த்து தகுதியுடைய படங்களை தேர்வு செய்யவுள்ளது.
இதற்கான போட்டியில் கலந்து கொள்ளும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், வரும் அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக தங்களது படங்களின் Blue Ray HD DVD பிரதியை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பு முதல்வரிடம் அளித்து கூடவே திரையிடல் கட்டணமாக 1000 ரூபாயையும் செலுத்துமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.