‘மான்ஸ்டர்’ மற்றும் ‘பர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்த ‘DNA’ திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய நடிகை நிமிஷா சஜயன், “நான் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வரும்போது எப்போதும் ஒரு பதட்டம் இருக்கும். ஆனால் ‘DNA’ படத்துக்கு மட்டும் எனக்கு அப்படி எந்தவிதமான பதட்டமும் இல்லை. எல்லோரும் என்னை நன்றாக நடித்திருக்கிறீர்கள் என கூறுகிறார்கள். இந்த பாராட்டுகளுக்குக் காரணம் இயக்குநரே.
படப்பிடிப்பு முழுவதும் நான் சந்தோஷமாக இருந்தேன். அதர்வா மிகவும் திறமையான நடிகர். அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. அதர்வா இல்லையென்றால் ‘திவ்யா’ எனும் என் கதாபாத்திரம் முழுமையாகவே இல்லாமல் போயிருக்கும். படக்குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘DNA’வின் வெற்றிக்கு அவர்கள் ஒவ்வொருவரும் காரணம். மேலும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.