அஜித் நடிக்கும் அவரது 64வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற பேச்சு கோலிவுட்டில் பரவி வந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இப்படத்தையும் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘கேஜிஎப்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியே நடிக்கவுள்ளாராம். படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் தொடர் நிறைவடைந்ததும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித், நான் முதன்முறையாக நடிக்க வந்தபோது, தமிழை சரியாக பேசமுடியவில்லை. என் உச்சரிப்பில் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்காக எழுந்த விமர்சனங்களைப் பார்த்ததும், என் குறைகளை சரிசெய்யத் தீர்மானித்து பயிற்சி மேற்கொண்டேன். அந்தப் பயிற்சியின் மூலம் அந்தப் பிரச்சனையை சரி செய்தேன். இன்று நான் அடைந்துள்ள இடத்தை அனைவரும் அறிவார்கள். சினிமாவைப் போலவே கார் ரேஸிங்கிலும் காயங்கள் ஏற்படும். ஆனால் நான் தொடர்ந்து பயிற்சி எடுப்பேன், விரைவாக கற்றுக்கொள்வேன் என்றார்.
நான் தற்போது 54 வயதில் இருக்கிறேன். இருந்தாலும் என் முழுமையான முயற்சியுடன் கார் ரேஸில் தொடர விரும்புகிறேன். கடவுளின் அருளால் எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. முக்கியமாக, பெரும் காயமின்றி இருக்க நான் பணிபுரியும் குழுவினரின் ஒத்துழைப்பும், குடும்பத்தினரின் ஆதரவும் முக்கிய காரணங்கள். நான் 60 வயதிற்கு மேல் கார் ரேஸில் ஈடுபட்டுள்ளவர்களையும் பார்த்துள்ளேன். அதுபோல, நானும் அந்த வயதுவரை இந்த துறையில் செயல்படலாம். அதனால்தான் இப்போது கார் ரேஸில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். ‘அஜித் குமார் கார் ரேஸிங்’ நிறுவனத்தை மிகவும் சிறப்பான நிறுவனமாக மாற்றுவதையே என் இலக்காகக் கொண்டு செயல்படுகிறேன். மற்றவர்கள் என்னைப்பற்றிப் பேசுவது குறித்து நான் கவலைப்படுவதில்லை அதற்காக என்னை நான் மாற்றிக்கொள்ளவில்லை. வெற்றியாளராக இருப்பதே என் விருப்பம். என் வாழ்நாளின் கடைசி கட்டத்தில், ‘நான் முயற்சி செய்தேன், நான் ஏதோ ஒன்று செய்தேன்’ என்று உணர்வதிலேயே மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.