தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது நடிப்பைத் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீப காலமாக அவர் கார் பந்தயத்துறையில் உலகளவில் சிறந்த சாதனைகள் படைத்துவருகிறார். அவரது கலை மற்றும் பந்தயத்துறையில் செய்த பங்களிப்புகளை பாராட்டி, மத்திய அரசு ஜனவரி மாதம் அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லியில் நடந்த பத்ம விருது விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கையில் இருந்து அவர் இந்த விருதை பெற்றார். அவருடன் அவரது மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற பிறகு சென்னை திரும்பிய அஜித் குமாருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித், “அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம்” என்றார். மேலும் டில்லியில் நடந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “பத்ம பூஷண் விருது பெற்றது இன்னும் எனக்கு நம்பிக்கையில்லை. நான் இதுவரை மனதளவில் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்கிறேன் என உணர்கிறேன். அதனால் இந்த விருது பெற்றது சிறந்த உணர்வையே ஏற்படுத்துகிறது. விருது அறிவிக்கப்பட்ட தருணத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. இப்படி விருதுகள் கிடைக்கும் போதுதான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர முடிகிறது.
நான் பட்டங்களை பெரிதாக நம்புபவரல்ல. அஜித் அல்லது ஏ.கே என்று அழைத்தால் போதும். நான் ஒரு நடிகன்; மற்ற வேலைய்களைப்போல் இது ஒரு பணி மட்டுமே. அதற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேன். எனக்குப் பணியை செய்யவே பிடிக்கும். எளிமையான வாழ்க்கையை வாழ முயற்சி செய்கிறேன். அதிகமாக யோசிப்பதைக் தவிர்க்கிறேன். என் வெற்றிக்கு காரணமானவர் என் மனைவி ஷாலினி. என் வாழ்க்கையில் அவர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். வெற்றியோ, தோல்வியோ, பாராட்டோ என என்னிடம் ஏற்பட்ட அனைத்திற்கும் அவர் துணை நின்றார். என் முடிவுகள் சரியாக இருந்ததோ, தவறாக இருந்ததோ, எப்போதும் அவர் என்னை விட்டுவிடவில்லை. என்னை ஊக்குவிக்கத் தவறியதில்லை. எனவே என் சாதனைகளுக்கான பாராட்டுகள் அனைத்தும் அவருக்கே செல்கின்றன,” என்றார்.