அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் 2021-ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம், நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, 2022-ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ திரைப்படத்தின் மூலம், தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தற்போது, மராத்தி மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்ததால், ரசிகர்களிடம் அதிக பிரபலமானார். இப்போது, இளைஞர்களின் ‘க்ரஷ்’ ஆக கயாடு லோஹர் மாறியுள்ளார்.இதற்கிடையில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில், கயாடு லோஹர் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 2 வாரங்களாக ‘டிராகன்’ படத்திற்கு நீங்கள் எனக்கு அளித்த அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமிழ் சினிமாவில் முதல்முறையாக, ‘இதயம் முரளி’ படத்திற்குத்தான், எனது ‘லுக் டெஸ்ட்’ புகைப்படங்களை கொடுத்தேன். விரைவில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.