சமீபத்தில், நாய்களை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ‘சாட் பூட் த்ரி, வாலாட்டி, நாய்கள் ஜாக்கிரதை, ஓ மை டாக், ராக்கி, கூர்கா, ஜாக்’ போன்ற படங்கள் அனைத்தும் நாய்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. தற்போது, ‘சோரன்’ என்ற இன்னொரு படம் வெளியாக உள்ள நிலையில், மேலும் ஒரு புதிய படம் நாயை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158089.png)
‘பிரியமுடன், ஜித்தன், இரனியன், யூத்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, தற்போது புதிய படம் ஒன்றை கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கியுள்ளார். அந்த திரைப்படம் ‘சுப்ரமணி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அவரது உதவி இயக்குநர் ராகுல் பரமஹம்சா இயக்க, எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். சவுந்தர்யா தயாரிக்கிறார். இதில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஒளிப்பதிவை அகிலேஷ் காத்தமுத்து மேற்கொள்கிறார்.
“மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள்தான். புனித நூல்களிலும், புராணங்களிலும், வரலாற்று சம்பவங்களிலும் நாய்கள் மனிதனின் நம்பகமான துணையாக இடம்பெற்றுள்ளன. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான தொடர்பு 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்ற உண்மை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகிய உலக புகழ்பெற்ற இயக்குநர்களும் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளில் நாய்களை முக்கிய கதாபாத்திரமாகச் சேர்த்திருக்கிறார்கள் என்பதையும் கவனித்துள்ளேன்.
நீண்ட காலமாக, நாயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது. அந்த கனவு இப்போது ‘சுப்ரமணி’ படத்தின் மூலம் நிஜமாகியுள்ளது. இதில் ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ இனத்தைச் சேர்ந்த ஒரு அரிய வகை நாய் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது.
இந்த இன நாய்கள் ராஜஸ்தானில் சில நாடோடிகள் வளர்த்துவருகின்றனர். அவர்கள் இதனை ‘பஞ்சாரா நாய்கள்’ என்று அழைக்கிறார்கள். ‘சுப்ரமணி’ திரைப்படம் ஒரு குற்ற விசாரணை சார்ந்த திரில்லர் கதையாக இருக்கும். கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு உதவியாக ‘பஞ்சாரா’ எனப்படும் அந்த நாய் முக்கியமான பாத்திரமாக இருக்கும். இந்தப் படத்தில், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் திவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ‘சலார்’ படத்தில் நடித்த ஜெயவாணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என அவர் கூறினார்.