அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியிடப்பட உள்ளது. இந்த படம், ஹாலிவுட் திரைப்படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சில சட்டபூர்வமான சிக்கல்களால், இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடாமல் மூன்று வாரங்கள் தள்ளிவைத்து தற்போது வெளியிட தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பு செலவுகள் மற்றும் சம்பள விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு 100 கோடி, திரிஷாவுக்கு 6 கோடி, அர்ஜுன் 6 கோடி, ரெஜினா 1 கோடி, ஆரவ் 50 லட்சம், இசையமைப்பாளர் அனிருத்திற்கு 8 கோடி, இயக்குநர் மகிழ் திருமேனிக்கு 4 கோடி என சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கும்அதிகமாக படத்தின் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஹாலிவுட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமைத் தொகை சேர்த்து, மொத்த பட்ஜெட் சுமார் 250 கோடி முதல் 275 கோடி வரை இருக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இப்படத்தின் ஓடிடி உரிமை மட்டும் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். சாட்டிலைட் உரிமை மற்றும் பிற உரிமைகள் மூலம் மேலும் 50 கோடி வரை வசூலிக்கலாம். தியேட்டர் உரிமை மட்டும் 75 கோடிக்கு விற்கப்பட்டிருக்கலாம். திரைப்படம் வெளியான பிறகு, தியேட்டர் வசூலின் மூலம் மட்டும் 300 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.