தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் முதன்முதலாக அவர் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். தற்போது அவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “நடிகையர் திலகம்” படத்தில் கீர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், “ஒரு மலையாள படத்தில் நடிப்பதற்காகவே எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. எனது அம்மா போல நானும் ஒரு முன்னணி நடிகையாக ஆகப்போகிறேன் என்ற சந்தோஷத்துடன் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அந்த படம் நடுவே நிறுத்தப்பட்டது. அதன்பின் மேலும் இரண்டு புதிய படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்களும் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதனால் என்னை யாரும் ராசியில்லாத நடிகை என்றார்கள். எனினும், நான் விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து செய்தேன். மெல்ல மெல்ல எனது திறமையை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்தேன், இறுதியில் தேசிய விருதையும் வென்றேன். தற்போது நல்ல திரைப்படங்களில் நடித்து பெயரையும் பெற்றிருந்தாலும், எனது ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட விமர்சனங்கள் என் மனதில் அடிக்கடி நினைவுக்கு வந்து கொஞ்சம் வருத்தம் தருகின்றன என்றார்.