விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் இப்போது ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் செல்வம்.
விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது இது குறித்த சர்ச்சையைன கருத்தை யு டியுப் சேனல் ஒன்றில் வெளியிட்டு உள்ளார் பத்திரிகையாளர் செல்வம்.
இவர், “இந்த போஸ்டரில், வயதான தோற்றம், இளமையான தோற்றம் என இரண்டு வேடங்களில் விஜய் இருக்கிறார். அதே போல போஸ்டரில் ஒரு விமானம் மற்றும் பாராசூட்டும் இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டு விஜய்யும் விமானிகள் உடையில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ‘The Greatest of All Time’ (எப்போதும் பெரியவன்) என்ற வாசகமும், ‘Light ca devour the darkness but darkness cannot consume the light’ (இருளால் ஒளியை விழுங்க முடியாது) என்ற வாசகமும் இடம்பெற்று உள்ளன.
யார் சூப்பர் ஸ்டார் என்ற போட்டியில் ரஜினியுடன் மோதினார்கள் விஜய் ரசிகர்கள். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் விஜய் தனது லியோ படத்தில் பாடல் வரிகளை வைத்தார். பதிலுக்கு ஜெயிலர் படத்தில் ரஜனியும் வார்த்தைகளை வைத்தார்.
பிறகு லியோ பட வெற்றி விழாவில், சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் பேசினார்.
ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் போட்டி இப்போதும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. இதன் வெளிப்பாடாகத்தான், ‘எப்போதும் பெரியவன், இருளால் ஒளியை விழுங்க முடியாது’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.
இதற்கு போட்டியாக, ரஜினியின் தலைவர் 171 படத்தில் பாடல் மற்றும் வசனங்கள் இடம் பெறலாம்” என்று பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.