கே.பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க‘ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை பிரகதி. தொடர்ந்து, பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் பிரகதி, 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பிரகதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதை நடிகை பிரகதி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையை கண்டித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய அடிப்படை ஆதாரமற்ற செய்தியை எப்படி வெளியிடுகிறார்கள்? தன்னிடம் இதுபற்றி விசாரிக்காமல் இப்படி வதந்தி பரப்புவதைஏற்க முடியாது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.