ராசா விக்ரம் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ், வருணிகா, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் , ‘புது வேதம்’. ரபி தேவேந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
விழாவில் கலந்துகொண்ட, வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், “புது வேதம் படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டுக் காட்டினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும்போது, ‘எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று படம் எடுக்கிறார்கள்’ என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இந்த திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடன் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
ராசா விக்ரம் போன்று சாதி வேண்டாம், மதம் வேண்டாம், எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிப்போம் என புரட்சிகரமான முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது; ஆறுதல் அளிக்கிறது. இந்த இயக்குநரின் பார்வை இடதுசாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக; சமத்துவப் பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது.
திரைத்துறையில் எத்தனை சாதிவெறியர்கள் வந்தாலும் மதவெறியர்கள் வந்தாலும் எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும். ” என்றார்.