மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சிவகார்த்திகேயனை முதலில் பார்த்தபோதே ‘நீ பெருசா சாதிக்கணும்’ என்று சொன்னேன். இப்போது அவர் சாதித்துவிட்டார். நடிகை சரிதா என்னிடம், ‘சிவகார்த்திகேயன் ரஜினியைப் போல அடக்கமானவர்’ என கூறுவார். நான் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை… ரஜினியே தான்” என்றார்.
நடிகை சரிதா மேடையில் பேசும்போது, “சிவகார்த்திகேயனின் லுக்கும், அவரது பேச்சும் ரஜினிபோல் இருப்பதால், இனிமே சிவாவை ‘குட்டி ரஜினி’ என அழைப்பேன்” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் நடித்த ‘மெரினா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வெறும் 50 பேர் முன்னிலையில் நடைபெற்றது. இப்போது இங்கே இத்தனை ரசிகர்கள் சூழ்ந்திருக்கின்றனர். மிகவும் எமோஷனலாக உள்ளது. போன படம் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. அதுக்கு சாரி. பட் இந்த முறை மிஸ் ஆகாது.
மிஷ்கின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிஷ்கினுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. மிஷ்கின் பெரிய வார்த்தையெல்லாம் சொன்னார். ரஜினி மிகப் பெரிய மனிதர். ஆனால், நானும் ரஜினியைப் போல எப்பவும் தன்னடக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். கண்டிப்பாக அப்படி இருப்பேன்” என்றார்.