“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவர், பள்ளி பருவத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் சின்ன வயதில் இருந்தே தீவிர ரஜினி ரசிகன். ஒரு முறை சென்னை சென்றபோது, அங்கு வாஹினி ஸ்டுடியோவில் ரஜினியின் பணக்காரன் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்ததை அறிந்தேன். எப்படியோ அந்த ஸ்பாட்டுக்குச் சென்றுவிட்டேன்.
தளத்துக்கு உள்ளே நுழைந்த போது, ஒரு பெண், அசால்ட்டாக புகை பிடித்துக்கொண்டு இருந்தார். ‘அட.. ரஜினி பட படப்பிடிப்பிலேயே புகைப் பிடிக்கிறாரே… இந்த பெண் மணி யார் “ என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த பெண்மணி திரும்ப.. அட அது ரஜினியேதான். “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” என்ற பாடலில் ரஜினிகாந்த் பெண் வேடம் அணிந்து நடனம் ஆடுவார். அந்த காட்சிதான் அப்போது படமாக்கப்பட்டது” என தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் இயக்குநர் ஜெ.சுரேஷ்.