தமிழ்த் திரையுலகில் மிகப்பிரலமாக விளங்கிய.. முதன் முதல் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். இவர் ஒரு முறை மெரினா பீச்சுக்கு காற்று வாங்கச் சென்றார்.
அங்கு இரண்டு வாலிபர்கள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தார். அவர்கள், தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரிந்துகொண்டார்.
அவர்களிடம் சென்று “சென்னையிலே என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?” என கேட்டார்.
அவர்கள் “எங்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் வாய்ப்புக் கேட்டு இங்கே வந்திருக்கிறோம்” என்றனர்.
“அப்படியா.. இருவரும் நாளை என்னை வந்து பாருங்கள்” என சொல்லி புறப்பட்டு விட்டார்.
அடுத்த நாள் அந்த இளைஞர்கள் இருவரும், சுந்தராம்பாள் இல்லத்திற்குச் சென்றனர். அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்தை நீட்டி இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கனை போய் பார்க்கச் சொன்னார்.
இருவரும், எல்லீஸ் ஆர் டங்கனை பார்க்கச் சென்றனர். இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க வாய்ப்பு அளித்தார்.
அப்படி வாய்ப்பு கிடைத்து பெரும் பிரபலம் ஆனவர், பி.எஸ்.வீரப்பா.
பலர் கடுமையாக முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் சூழல் என்றும் உண்டு. ஆனால் வீரப்பாவுக்கோ கடற்கரையில் வாய்ப்பு தேடி வந்தது என்பது ஆச்சரியம்தானே!