தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், சினிமா தவிர ரேஸ் விளையாட்டில் மட்டும்தான் கவனம் செலுத்துவார். அரசியல் ஆசை உள்ளது போல பேசுவது.. திடீரென ரசிகர்களை சந்திப்பது போன்ற விசயங்களை அவர் விரும்பியதே இல்லை. ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டார்.
ஆனால் அவரைத் தேடி அரசியல் வாய்ப்பு வந்தது. இதை, திரைப்பட செய்தியாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
அவர், “2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்தினர். அந்த கூட்டத்தில், அஜித் எழுந்து, ‘அய்யா.. இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்கய்யா..’ என தைரியமாகச் சொன்னார். திரைத்துறையினர் அனைவருமே சொல்ல பயந்த விசயம் அது.
அஜித்தின் இந்தத் துணிவு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அதற்கு முன்பே அஜித்தின் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா, அவரது திருமண வரவேற்பில் முதல் ஆளாக கலந்துகொண்டார்.
இந்த 2010ம் ஆண்டு சம்பவத்துக்குப் பிறகு, அஜித்திடம் ஜெயலலிதா அரசியலுக்கு வருமாறு கூறினாராம். ஆனால், ‘இறுதி வரை படங்களில் நடிப்பதே என் லட்சியம். அரசியல் வேண்டாம்’ என நாசூக்காக சொல்லிவிட்டாராம்” என்றார் செய்யாறு பாலு.