Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால், சுனைனா நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லத்தி’.

வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிளாஸோ தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த ‘லத்தி’ படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் விஷால் பேச வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “புரட்சி தளபதி வாழ்க” என்றார்கள். அப்போது குறுக்கிட்ட நடிகர் விஷால், “இது வேண்டாம்.. நான் தளபதியும் அல்ல; புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவுதான்..” என்று சொல்லிவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.

“இந்த லத்தி’ திரைப்படம் நான்கு மொழிகளில் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான வினோத் என்னிடம் கதை சொல்லி எட்டு நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், என்னிடம் கதையைச் சொல்லும்போது “நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா..” என்றார். கதையைக் கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

படப்பிடிப்பில் நான் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

45 வயதில், 32 படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4-வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ்விடம் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு என்று அவனுடைய அம்மா, அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன்.. எந்தக் குழந்தையாலும் அவனை மாதிரி நடித்திருக்கவே முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.

ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் எனக்குக் கிடைத்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்குத்தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4-வது மாடின்னு இல்லை.. 8-வது மாடியில் இருந்தும்கூட குதிக்கலாம்.

நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News