Wednesday, November 20, 2024

வரலாறு முக்கியம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் இது.

கோவையில் பள்ளி ஆசிரியரான அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் நாயகன் ஜீவா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

லோக்கல் அரசியல் பிரமுகரான வி.டி.வி.கணேசுடன் நட்பில் இருக்கும் ஜீவா எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தற்போதைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இவர்கள் வீடு இருக்கும் அதே தெருவில் கேரளாவில் இருந்து வரும் நாயகிகளான காஷ்மீரா, பிரக்யா ஆகியோரின் குடும்பம் குடியேறுகிறது.

பிரக்யாவைப் பார்த்தவுடன் கிறங்கிப் போகும் ஜீவா அவரை பாலோ செய்கிறார். அப்போது பிரக்யாவின் அக்காவான காஷ்மீரா அறிமுகமாக.. அவரைப் பார்த்ததும் மதிமயங்கிப் போகிறார் ஜீவா. அடைந்தால் காஷ்மீராவைத்தான் அடைவேன் என்று தன் மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு காஷ்மீராவை சுற்றி, சுற்றி வந்து காதல் அப்ளிகேஷனை கொடுக்கிறார்.

முதலில் இதை மறுக்கும் காஷ்மீரா பின்பு வழக்கமான சினிமா காதலிகள்போல் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தனது இரண்டு மகள்களையும் துபாயில் இருக்கும் தனது உறவினர் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருக்கும் காஷ்மீரா, பிரக்யாவின் அப்பாவான சித்திக் இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்.

பிரச்சினை பெரிதாகிறது. ஜீவாவின் வீட்டிலும் இது தெரிய வர.. கே.எஸ்.ரவிக்குமாரும் ஜீவாவைக் கண்டிக்கிறார். அதே நேரம் காஷ்மீராவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை ஜீவா அடித்துவிட, அதே துபாய் மாப்பிள்ளையுடன் திருமணத்திற்கே தேதி குறித்து விடுகிறார் சித்திக்.

அடுத்து என்ன நடந்தது..? ஜீவா-காஷ்மீரா காதல் என்னவானது..? என்பதுதான் இந்த வரலாறு முக்கியம்’ படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனான ஜீவா, சந்தோசமாக வாழும் ஜாலியான இளைஞனாக, பிரக்யா நாக்ராவை பார்த்ததும் காதல் கொண்டு, பின்பு அவரது அக்காவான காஷ்மீரா பர்தேசியை பார்த்தவுடன் அழகில் மயங்கி. காதலனாக மாறி, விடிவி கணேசுடன் சேர்ந்து வயதுக்கு மீறிய பேச்சையும், வேலையையும்  காமெடியாக செய்யும் இளைஞனாக படம் நெடுகிலும் தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஜீவா.

பல காட்சிகளில் ஜீவாவின் ஒன் வேர்டு டயலாக்குகளுக்கு ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது. ஆனால் அவை அத்தனையும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என்பதுதான் இதிலிருக்கும் ஒரு சோகமான விஷயம்.

கூடுதலாக ஜீவா பெண் வேடமிட்டு வருவதிலும் அழகாகத் தென்படுகிறார். வயிற்றில் இருக்கும் முடியையும் நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடிப்பென்று செய்தாலும் நூறு சதவிகிதம் முழுமையாகச் செய்ய வேண்டும் ப்ரோ.. மேலும் இதே காட்சியில் விடிவி கணேஷிடம் “கண்ணை பார்த்து மட்டும் பேசுண்ணே..” என்று சிரித்துக் கொண்டே ஜீவா சொல்லுமிடத்தில், எந்தவொரு உம்மணா மூஞ்சியும் சிரித்துவிடுவான். அப்படியொரு நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஜீவா.

நாயகிகள் காஷ்மீராவும், பிரக்யாவும் அழகுப் பதுமைகள். இளம் பருவச் சிட்டுக்கள் என்பது முகத்திலேயே தெரிகிறது. அதேபோல் அதிகமாக படங்களில் நாம் பார்த்திராதவர்களாகவும் இருப்பதால், இவர்கள் காட்டும் நடிப்பை நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

அக்கா காஷ்மீரா அமைதியான வழியில் நடிப்பைக் காட்ட.. தங்கையான பிரக்யாவோ ஆர்ப்பாட்டமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். அதிலும் “அக்காதான் உன்னை வேணாம்ன்னு சொல்லிருச்சே.. அப்போ என்னைக் கட்டிக்கோ” என்று சொல்லி ஜீவாவை ஒட்டிக் கொள்ளும் சின்னப்புள்ளத்தனத்தை வஞ்சகமில்லாமல் நடிப்பில் காட்டியிருக்கிறார் பிரக்யா.

படத்தில் நாயகன் லெவலுக்கு அட்ராசிட்டி செய்திருக்கிறார் அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் வி.டி.வி.கணேஷ். எதற்கெடுத்தாலும் “டெல்லிக்குப் போகணும்..”, “பாராளுமன்றத்துல நுழையணும்” என்ற கனவையே சொல்லும் கணேஷ் செய்வதெல்லாம் மொள்ளமாரித்தனம் என்பதுதான் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் முரண்பாடு.

ஜீவாவுக்கு அரசியல் ஈடுபாடு வந்துவிட்டதோ என்னவோ.. கணேஷை வைத்து நிறையவே அரசியல் பேசியிருக்கிறார். “ஆமா.. எதுக்கெடுத்தாலும் டெல்லிக்குப் போகணும்.. டெல்லிக்குப் போகணும்ன்றீங்களே.. அங்கே போய் என்ன கிழிச்சீங்க..?” என்று அவர் கேட்கும் கேள்விக்கு பலமான கை தட்டலும் கிடைக்கிறது. அரசியல்வியாதிகள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பார்களாகட்டும்..!

மற்றபடி ஜீவாவுக்கு மாமா வேலை பார்ப்பதோடில்லாமல், அடுத்தவர் மனைவியுடன் சரசமாடுவது.. பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உறவாடுவது.. ஜீவாவுக்கு காண்டம் பாக்கெட்டை எடுத்துப் போகச் சொல்லி அறிவுறுத்துவது.. காட்சிக்குக் காட்சி இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை பேசியிருப்பது.. பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகள் பற்றிய வசனங்களை பேசியிருப்பது என்று தியேட்டருக்கு வரும் இளைஞர்களை கெடுக்கும் விஷ மருந்துகளை விடிவி கணேஷ் மூலமாகப் படம் முழுவதும் தூவியிருக்கிறார் இயக்குநர்.

இதனிடையில் ஒரு கவிதைத்தனமான திரைக்கதையாக தனது முன்னாள் காதலி வீட்டிற்கு வந்தவுடன் கே.எஸ்.ரவிக்குமார் பரபரப்பாக மாறுவதும், இதனைப் பார்த்து அம்மா சரண்யாவிடம் ஜீவா கேட்கும் கேள்விகளெல்லாம், காமெடியுடன் சேர்ந்து நிஜ வாழ்க்கையை எடுத்துக் காட்டும் காட்சியாகவும் அமைந்திருக்கிறது.

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பது ஆச்சரியமான விஷயம். அதேபோல் பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்ஸ்கள் அனைத்தும் காதல் கதைகளை சொல்கின்றன. கதைக் களத்திற்கு ஏற்றபடி பின்னணி இசையும் அமைந்திருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு ஒரு இடத்தில்கூட தொய்வில்லாமல் படத்தினை குளுமையாக்கியிருக்கிறது.

ஆனாலும், இந்தக் கதையை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி எப்படி தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது. ஏனெனில் அவருடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரையிலும் தயாரித்திருக்கும் படங்களில் இல்லாதவகையில் இந்தப் படம்தான் இத்தனை மோசமான திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கிறது.

படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்திருந்தாலும் அத்தனையும் ஆபாசக் களஞ்சியம் என்பதுதான் கொடுமையான விஷயம். கொடூரமான விஷயமும்கூட. தேனில் சிறிதளவு விஷத்தைக் கலந்து கொடுத்த கொடுமைதான் இதில் நடத்திருக்கிறது.

ஜீவாவுக்கு சமீப வருடங்களில் வெற்றி கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு… இளைய சமுதாயத்தினரை கெடுக்கும் அளவுக்கா… தரம் தாழ வேண்டும்..? வெற்றி முக்கியம்தான். ஆனால் அதைவிடவும் நேர்மையான வெற்றியல்லவா முக்கியம்..!?

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News