ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.
பரத், வாணி போஜன் தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜனின் காதலை அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் இதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் வாணி போஜன் தன்னுடைய கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார். அந்தக் கனவில் யாரோ ஒரு முகமூடி அணிந்த ஆள், பரத்தை கொலை செய்துவிட்டு அவரையும் கொலை செய்ய முயல்கிறான். இந்தக் கொடூர கனவினை பற்றி தனது கனவரான பரத்திடம் சொல்லி பயப்படுகிறார் வாணி. மேலும், இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வடைகிறார். இதன் பிறகு பரத் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பரத் உயிர் பிழைக்க, அவரது கார் மட்டும் சேதமாகிறது.
இது மாதிரியான குழப்பங்களும், பிரச்சினைகளும் இத்தம்பதிகளை தொடர்ந்து சூழ்ந்து வந்திருக்கின்றன. இதனாலேயே பரத் தற்போதுதான் வீடு மாறி புது வீட்டுக்கு வந்திருக்கிறார். இங்கே வந்தும் இதே போன்று பிரச்சினைகள் தொடர்வதால் தம்பதிகள் இருவருமே கவலைப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காண சொந்த ஊரிலுள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு படையலிட்டால் நல்லது பிறக்கும் என்று நினைத்து பரத், வாணி, மகன் அங்கித், பரத்தின் நண்பரான ராஜ்குமார் நால்வரும் பரத்தின் சொந்த ஊருக்கு காரில் செல்கின்றனர்.
கிராமத்தில் குல தெய்வ வழிபாடு பூஜைகள் நிறைவடைய.. தம்பதியர் இருவரும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் அதே தருணத்தில், பரத் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலைக்காக அவருக்கு அழைப்பு வருகிறது. “இது இறைவனின் செயல்” என்றெண்ணி சந்தோஷப்படும் பரத்தும், வாணியும் அவசரமாக அந்த இரவு நேரத்திலேயே ஊருக்கு கிளம்புகின்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வழியில் கார் பஞ்சராகிறது. அப்போது அந்தப் பக்கமாக வரும் ஒருவர், “இந்த இடம் மிகவும் ஆபத்தானது.. உடனேயே போயிருங்க” என்று எச்சரிக்கிறார். பரத் டயரை மாற்றிவிட்டு கிளம்பும்போது பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அங்கே நடக்கிறது. வாணி தன் கனவில் கண்டதுபோல முகமூடி அணிந்த ஒருவர் இவர்களை தாக்குகிறார். அவர்களை தாக்கியது யார்? வாணி கண்ட கனவுக்கும், நிஜத்தில் நடக்கும் இந்தச் சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். ‘காளிதாஸ்’ படத்திற்குப் பிறகு பரத்துக்கு கிடைத்த நல்ல செமத்தியான திரில்லர் கதை இது. சிறப்பான கதையை தேர்வு செய்தது மட்டுமின்றி அதில் சிறப்பான நடிப்பையும் தந்து படத்திற்கு சிறப்பளித்திருக்கிறார் பரத். ஒரு சாதாரண மனிதனுக்கு திடீரென்று உயிர் போகும் பிரச்சனை வந்தால் அவன் அதை எப்படி எதிர்கொள்வானோ, அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பரத். ஹீரோயிஸம் காட்டாமல் ஒரு எளிய மனிதனின் பிரதிபலிப்பாகவே படம் முழுவதும் நடித்திருக்கிறார் பரத்.
மற்ற படங்களைவிட வாணி போஜனுக்கு இப்படத்தில் நடிப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். அவரை மட்டுமே மையமாக வைத்து நடக்கின்ற கதைக் களம் என்பதால் அவரும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். எமோஷன்ஸ், கோபம், காதல், பாசம் என அனைத்துவித நடிப்பையும் அழகாக கொடுத்துள்ளார். பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வாணி போஜன், அதற்கான தீர்வாக கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு அதிரடியாக மட்டுமல்ல, பாராட்டும்படியாகவும் உள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், பரத்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் ராஜ்குமார் ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
ஒரு த்ரில்லர் படத்திற்கு இசை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒளிப்பதிவும் முக்கியம். அந்த வகையில் நம்மையும் திரையில் பயணிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. அந்த அத்துவானக் காட்டுக்குள்.. காற்றாலைகள் சூழ்ந்திருக்கும் இருட்டு பகுதியில் லைட் வசதிகளை ஞாபகம் வைத்திருந்து எப்படித்தான் தினம், தினம் ஷூட்டிங் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒளிப்பதிவு தரமானதுதான்.
படத்தை இறுதிவரை தாங்கிப் பிடிப்பது இசையும்தான். த்ரில்லர் ஷாட்டுகளில் நம்மை திகிலூட்ட சவுண்ட் எஃபெக்ட்டை அதிகப்படுத்தி, நம்மை அதிகம் பயப்படவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். மேலும் படம் பார்ப்பவர்களை பயத்துடன் பார்க்கவும் வைக்கிறது கலைவாணனின் படத் தொகுப்பு. இரண்டு மணி நேரமும் நம் கவனம் முழுவதும் படத்துடன் ஒன்றிப் போக வைத்திருக்கிறார். பயமுறுத்துகின்ற காட்சிகளில் நறுக்கினாற் போன்றிருக்கும் அவரது வெட்டுக்களினால் நமக்குள் பயம் அதிகம் ஏற்படுகிறது.
பொதுவாக இது போன்ற சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே மொத்தப் படத்தையும் முடித்துவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் மொத்தத் திரில்லிங்கும் வெட்டவெளியில்தான் நடந்திருக்கிறது. இயக்குநருக்கு இதற்காக தனி பாராட்டுக்கள்..!
ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுத்ததோடு அதில் நல்ல மெசேஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
முகமூடி அணிந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி இவர்களை கொலை செய்ய நினைக்கிறார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு கிளைமாக்ஸில் வெளிப்படுத்தும் காரணமும், அந்தக் காட்சியும் அசத்தல். தொடர்ந்து அந்தக் காரணத்திற்கான தீர்வாக இயக்குநர் முன் வைக்கும் விஷயமும் பாராட்டுக்குரியதுதான்..!
ஆனால், முதல் பாதியிலே கதையை கொஞ்சம் மேலோட்டமாக சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியை நாம் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம். ஆனாலும் தனது முதல் படத்திலேயே ஒரு நல்ல த்ரில்லர் கதையை தேர்வு செய்து மிரள வைத்திருக்கும் அறிமுக இயக்குநர் சக்திவேலுக்கு நமது வாழ்த்துக்கள்.
RATING : 3.5 / 5