Thursday, November 21, 2024

காஃபி வித் காதல் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொடைக்கானலில் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வரும் பிரதாப் போத்தன், அருணா தம்பதிக்கு ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் என்று 3 மகன்கள். திவ்யதர்ஷிணி மகள்.

இதில் மூத்த மகனான ஸ்ரீகாந்த், உள்ளூர் பள்ளியில் மியூஸிக் டீச்சராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சம்யுக்தாவுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

பெங்களூருவில் ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஜீவா,  அங்கேயே தன் காதலி ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு-கெதர் உறவில் இருந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா இவருக்குத் துரோகம் செய்துவிட்டு இன்னொரு பாடகருடன் சென்று விடுகிறார். மன விரக்தியில் கொடைக்கானல் திரும்புகிறார் ஜீவா.

ஜெய் வாரத்துக்கு ஒரு பெண்ணை காதலிப்பதுபோல் நடித்து டைம் பாஸ் செய்து வருகிறார். இவர் மீது இவர்களது குடும்ப நண்பரான விச்சுவின் மகளான அம்ரிதாவுக்குக் காதல். ஆனால் இந்தக் காதலை புரியாமலேயே இருந்து வருகிறார் ஜெய்.

இந்த நிலையில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான மாளவிகா சர்மாவை ஜெய்க்காக பேசி முடிக்கிறார்கள் குடும்பத்தினர்.

இந்த நேரத்தில் ஜெய் அம்ரிதா மீது காதல் கொள்கிறார். ஆனால் அம்ரிதாவோ ஜெய் தன் மீதான காதலை சொல்லாததால் வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தமும் செய்து கொள்கிறார்.

ஜெய்யை மணப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் மாளவிகா மீது ஜீவாவுக்கு காதல் வருகிறது. மாளவிகாவும் ஜீவாவை காதலிக்கிறார். ஆனால், இதை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் இருவரும்.

அந்த நேரத்தில் ஜீவாவுக்கு ரைசாவை பெண் பார்க்கின்றனர் பெற்றோர். ஆனால், ரைசாவுடன் ஸ்ரீகாந்த் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். இதனால் தன் தம்பிக்கும், ரைசாவுக்குமான திருமணத்தைத் தடை செய்ய தன்னாலான முட்டுக்கட்டைகளைப் போடுகிறார் ஸ்ரீகாந்த்.

இப்படியொரு குழப்பமான காதல்களுடன் இருக்கும் அந்த வீட்டில் கல்யாண ஏற்பாடுகளை செய்வதற்காக யோகிபாபுவும், அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லியும் வருகிறார்கள்.

இவர்களுக்கு இந்தக் குழப்பக் காதல்களும், கள்ளக் காதல்களும் தெரிய வர.. வீடே குழப்ப மயமாகிறது. இறுதியில் யார், யாரோடு இணைந்தார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்.

ஸ்ரீகாந்த் மனைவிக்குத் துரோகம் செய்யும் கதாப்பாத்திரம். தானே வலியப் போய் ரைசாவிடம் மாட்டிக் கொண்டாலும் பின்பு மனைவியிடம் இதை மறைக்காமல் சொல்லி பிரியவும் செய்கிறார். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் ஓகே என்றாலும் இதற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் நடித்திருக்கிறார். திருமணத்தை நிறுத்த வேண்டி இவர் செய்யும் சில ஜிம்மிக்ஸ் காட்சிகள் ஓகேதான்.

படத்தில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும்தான் அதிகப்படியான காட்சிகள் உள்ளன. குழப்பமான மனதுடையவராக ஜெய். வாழ்க்கைத் துணையாக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே தெரியாத கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் ஜெய். சும்மாவே அவர் நடிப்பு இப்படித்தான் இருக்கும். நடிப்புக்கேற்ற கேரக்டரும் கிடைத்தால் விடுவாரா ஜெய்.. குழப்பமான முட்டாள் கேரக்டரை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் ஜெய்.

தன் காதலியின் துரோகத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஜீவா, இதேபோல் புதிதாக வந்த காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். டிடியிடம் மட்டுமே தன் காதலை சொல்லிவிட்டு காதல் தானாக கனிந்து தன்னிடம் வரும் என்று திரைக்கதையின் மூலமாகக் காத்திருந்து காதலில் ஜெயிக்கிறார். நடிப்பில் வேறொன்றுமில்லை.

ஐஸ்வர்யா தத்தாவும், ரைசா வில்சனும் சூடான காட்சிகளுக்காகவே வந்து சென்றிருக்கிறார்கள். சம்யுக்தா கணவனின் பாரமுகத்தை நினைத்து வருந்தும் சராசரி மனைவியாக சென்டிமெண்ட் காட்சிகளுக்கு வலு கொடுத்திருக்கிறார்.

படம் முழுவதும் வயிற்றைத் தள்ளிக் கொண்டு கர்ப்பிணி கதாப்பாத்திரத்தில் டிடி திரைக்கதையை நகர்த்துவதற்காகப் பயன்படு்த்தப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் வரும் காட்சிகளில் கவர்ந்திழுக்கிறார். மாளவிகாவின் காதல் எதிர்பார்ப்பும், நடிப்பும் சுமார்.

அம்ரிதாதான் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்திருக்கிறார்.  ஜெய் வந்து தன்னிடம் காதலை சொல்லும்போது, “நீ நினைச்சா நிச்சயதார்த்தத்தை நிறுத்தியிருக்கலாம்.. ஆனால் என்னைவிட வசதியான பெண்ணை ஏற்றுக் கொள்ள நினைச்சீல.. இதான் உன் காதலா?..” என கேட்பது நெத்தியடி கேள்வி.

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி கூட்டணி சில காட்சிகளில் ரசிக்கவும் வைத்து, சிரிக்கவும் வைக்கிறார்கள். பல காட்சிகளில் அதுவும் இல்லை.

பாடல்களில் ரம்பம் ரம்பம்பம் பாடலை தவிர மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. ஒரு பாடலை பாதியோடு முடித்திருப்பது ஏனோ..? ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் நகைச்சுவையைத் தூண்டும் வகையில் இசையைத் தூவியிருக்கிறார் யுவன்.

ரம்பம் ரம்பம்பம் பாடலை படத்தின் ஊடேயே வருவதுபோல வைத்திருந்திருக்கலாம். இந்தப் பாடலில் ஆடியிருக்கும் நடிகர், நடிகையர் கூட்டணியில் தயாரிப்பாளர் குஷ்பூவும் இருந்திருந்தால் பாடலுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கிடைத்திருக்கும்.

யூத்தான, அழகான ஹீரோக்கள்.. அழகழகான ஹீரோயின்கள் என்று கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கும்வகையில் கேமிரா கோணங்களை வைத்து ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் மகள் தன் பள்ளி விழாவில் நடனமாடுவதைப் பார்த்து அந்த சைனிங் ஸ்டார் கோபப்படுவது ஏன்..? அந்தக் காட்சியில் தர்க்க ரீதியாக உண்மையில்லை.

“ஐஸ்வர்யா தத்தா என்னால்தான் கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான் நாங்கள் மீண்டும் சேர்ந்துவிட்டோம்” என்கிறார் ஜீவா. ஆனால், அதன் பின்னர் அந்த சைனிங் ஸ்டாருடன் திடீர் காதலாகி ஐஸ்வர்யா சென்றுவிட, “நல்ல வேளை போயிட்டா.. இல்லேன்னா யார் புள்ளைக்கோ நீ அப்பாவாகி இருப்ப..” என்று டிடி சொல்வது ஏன்..? இதுவொரு தேவையில்லாமல் திணிக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது.

நகைச்சுவை காட்சிகள் குறைவாக இருப்பதும் சுந்தர்.சி.யின் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது. மற்றபடி லாஜிக்கெல்லாம் பார்க்காமல் எப்போதும்போல் என் படம் என்று நினைத்து வந்து படம் பார்த்து சிரித்துவிட்டு வீட்டுக்குப் போங்க.. என்பது போலவே இந்தப் படத்தையும் தந்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News