கண்ணதாசன் என்றாலே கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும். ஏனென்றால் காலத்தால் அழியாத எத்தனையோ அருமையான பாடல்களை நமக்கு அளித்தவர் அவர்.
ஆனால் ஒரு படத்தில் அவர் பாடல் எழுத வாய்ப்பு கேட்க.. “பாடல் வேண்டாம்.. நடிக்க வாருங்கள்” என்று கூறப்பட்டது.
ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.
இப்படி பாடல் மறுக்கப்பட்டு கண்ணதாசன் நடித்த திரைப்படம், பராசக்தி. சிவாஜி நடித்த முதல் படமான பராசக்திதான்.
பாடல் வாய்ப்பு கேட்ட கண்ணதாசனிடம், தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், “பாடல் எழுத ஏற்கெனவே கவிஞர்களை ஒப்பந்தம் செய்துவிட்டேன். சில காட்சிகளில் நடி. நிச்சயமாக உணக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்” என்றார்.
அவரது வார்த்தையைத் தட்ட முடியாத கண்ணதாசனும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெரிய வேடம் இல்லை. சிறிய வேடம்தான்.
தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் கூறியது போல பிற்காலத்தில் முக்கிய பிரபலமாக ஒளிர்ந்தார் கண்ணதாசன். ஆனால் நடிகர் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு கவிதையில் உயர்ந்தார்.
அதன் பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.
“அப்போதெல்லாம் பி.ஏ. பெருமாள் அன்று கூறியதை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்வேன். மூத்தோர் வாக்கு பொய்ப்பதில்லை” என்று சொல்லி இருக்கிறார் கண்ணதாசன்.