அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’ படத்தின் டைட்டில் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமேஸான் பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு.’ இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுள்ளார்.
இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தலைப்பான அம்மு என்ற பெயரை 2019-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியன்று மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் வி.கணேசன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் கதையை 2020-ம் ஆண்டின் பிப்ரவரி 9-ம் தேதியன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதியன்று ஸ்டோன் பென்ச் நிறுவனம் தனது அம்மு படத்தை அமேஸான் பிரைமில் வெளியிடப் போவதாக அறிவித்தவுடன் இது குறித்து மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் இதற்கு எந்தப் பதிலும் வராமல் போனதால் கடந்த 18-ம் தேதியன்று இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது உறுதியானது. இதனால் மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கடந்த 18-ம் தேதியன்று சென்னை மாநகர 7-வது உரிமையியல் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து எதிர்த் தரப்பினரின் கருத்தை வரும் 26-ம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.