DeSiFM திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஜோசப் சேவியர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத் தொகுப்பு செய்துள்ளார்.
ஆர்.சி.ஐயப்பன், பி.கெளசல்யா, பிரனவ் பாண்ட் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் இயக்குநரான ஜெயக்குமார் பேசுகையில், “இப்படி ஒரு விழா இங்கு நடப்பதற்கு காரணமாக இருக்கும் இறைவனுக்கு நன்றி. இந்த அருமையான விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்திய என் ஆசிரியர் திண்டுக்கல் லியோனி சாருக்கு நன்றி. அவரிடம்தான் நான் அறிவியல் படித்தேன். அவர் அறிவியல் ஆசிரியர் என்பது யாருக்கும் தெரியாது. அந்த ரகசியத்தை இப்போது சொல்லிவிட்டேன்.
திரைப்பட பயிற்சி மையம் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது என்பது இதுதான் முதல் முறை. அதை DeSiFM செய்திருப்பது பெருமையாக இருக்கிறது.
திரைப்பட பயிற்சி மையத்தை பொருத்தவரை மாணவர்கள் படிப்பார்கள். குறும் படங்கள் எடுப்பார்கள், அதன் பிறகு அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். ஆனால், ஒரு முழுமையான திரைப்படம் தயாரிப்பது என்பது யாரும் செய்யவில்லை.
இந்த யோசனையை நான் லயோலா கல்லூரியில் இருக்கும்போதே சொன்னேன். லயோலா போன்ற பெரிய கல்வி நிறுவனத்தால் வெற்றிகரமான திரைப்படங்களை கொடுக்க முடியும் என்று நான் சொன்னேன். ஆனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி என்பதால் அதை அவர்களால் செய்ய முடியவில்லை.
அப்போது, எம்.எஸ்.எப்.எஸ்-ன் இந்திய தலைவராக பாதர் ஸ்டீபன் இருந்தார். அவர்தான் நிச்சயம் இதை நாம் செய்வோம் என்று நம்பிக்கை அளித்தார். அவருடைய நம்பிக்கை தான் இன்று வெற்றிகரமான படமாக உருவாகியுள்ளது.
இப்படி ஒரு யோசனையை செயல்படுத்துவதற்கு முன்பு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகூட இருக்க கூடாது, என்பதில் தெளிவாக இருந்தோம். எந்த ஒரு சிறு காரணத்தினாலோ சபையின் பெயருக்கு களங்கம் ஏற்பட கூடாது, என்று சொன்னார்கள்.
நான் லயோலா கல்லூரியில் மீடியா படிப்பில் 18 வருடங்கள் பேராசியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது மாணவர்களிடம் நான் சொல்வது ஒன்று மட்டும்தான், “தேவையில்லாத ஆபாசக் காட்சிகளை வைத்து படம் எடுக்காதீர்கள். நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வைத்து படம் எடுங்கள்” என்று சொல்வேன். அதனால், சபையினருக்கு நான் நிச்சயம் தரமான படத்தை மட்டுமே கொடுப்பேன் என்று உறுதியளித்தேன். அதன் பிறகுதான் படம் எடுக்க சம்மதித்தார்கள்.
படம் தொடங்கிய உடன், கொரோனா, ஊரடங்கு என்று பல பிரச்சனைகள் இருந்தாலும், பெங்களூரில் படப்பிடிப்பு நடத்தினோம். 18 நாட்களில் இந்த படத்தை முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் தான் இப்படி ஒரு தரமான படத்தை 18 நாட்களில் எடுக்க முடிந்தது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள், அதுவும் படம் விரைவாக முடிய ஒரு காரணம்.
படத்தை முடித்துவிட்டுத்தான் இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தோம். அவர் படத்தை பார்த்துவிட்டு படம் சிறப்பாக இருக்கிறது, நிச்சயம் நான் இசையமைக்கிறேன் என்று சொன்னார். சொன்னது போல் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளருடன் நான் பல குறும் படங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவருடைய பணியை பார்த்துதான் இந்த படத்தின் வாய்ப்பு கொடுத்தேன். அவரும் சிறப்பாக செய்து கொடுத்தார். என்னுடன் இந்தப் படத்தில் பயணித்த உதவி இயக்குநர்கள், இணை தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் அருட் தந்தை சேவியர் உட்பட அனவருக்கும் நன்றி.
ஒரு தரமான படமாக மட்டும் இன்றி, எந்தவித தேவையில்லாத காட்சிகளோ அல்லது திணிக்கப்பட்ட காட்சிகளோ இல்லாத படமாக இந்த ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ படத்தை இயக்கியிருக்கிறேன். நிச்சயமாக இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்…” என்று நம்பிக்கை தெரிவித்தார்.