தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகவும் இருக்கிறது தயாரிப்பாளர் S.R.பிரபுவின் Dream warrior Pictures நிறுவனம்.
‘அருவி’, ‘என்.ஜி.கே.’, ‘கைதி” என்று இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளன.
இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக்கின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் டைப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் ‘ஒக்கே ஒக்கா ஜீவிதம்’(ஒரே ஒரு வாழ்க்கை) என்ற பெயரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
அமலா, சர்வானந்த் இருவரும் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிது வர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசரும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநரான ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “வாழ்க்கையில் ஒவ்வொரு ‘கணமும்(நிமிடமும்)’ நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படமாக உருவாகியிருக்கிறது இந்தக் ‘கணம்’ திரைப்படம்.
இப்படத்தின் கதையை கேட்கும்போதே இப்படத்திற்கு செலவுகளும், வேலைகளும் அதிகமாக ஆகும் என்று தோன்றியது. ஆகையால், அதற்கு தகுந்த குழு வேண்டும் என்று நினைத்தோம்.
‘மாயா’ படத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். கடைசியில் இந்தக் கதையில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார்.
ரீது வர்மா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
சதீஷ் கதாபாத்திரத்தை பார்ப்பவர்கள் எப்படி இது போன்ற சவாலான பாத்திரத்தில் எப்படி நடித்தீர்கள்? என்று நிச்சயம் கேட்பார்கள்.
நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? அப்படி கிடைத்தால் இதையெல்லாம் சரி செய்து இருக்கலாம். இவை நடக்கமால் இருந்திருக்கலாம் என்று சில விஷயங்களில் தோன்றும். அப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்ன முயற்சி எடுப்போம்? அப்படி முயற்சி எடுக்கும்போது என்ன மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்? என்பதைத்தான் இந்தப் படத்தில் கூறியிருக்கிறோம்.
மேலும், அடுத்தடுத்த காட்சிகளில் இதுதான் நடக்கும் என்று கணிக்க முடிந்தாலும் அது சுவாரஸ்யமாகவே இருக்கும்படியாக தொழில் நுட்பம், வசனங்கள் மற்றும் இசையும் இருக்கும். ஒரு கதாபாத்திரம், ஒரு காட்சியில் தோன்றினாலும் கச்சிதமாக பொருந்தும்படி எடுத்துள்ளோம்.
முதல்முறையாக இரு மொழிப் படம் எடுக்கிறோம். பெரிய ஒரு செலவில் எடுக்கிறோம். அந்தப் படம் வருவதற்குள் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆவலும் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்ததுபோல் படம் நன்றாக வந்திருக்கிறது.
இப்படத்தில் இருக்கும் அறிவியல் புனைக் கதையை தனியாக எடுத்து வைத்துவிட்டு பார்த்தாலும், இந்தப் படம் நன்றாக இருக்கும். அம்மா, மகன் செண்டிமென்ட்டை தனியாக எடுத்து பார்த்தாலும் நன்றாக இருக்கும்.
மூன்று நண்பர்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிய கதை என்பதால், இந்தக் கதாபாத்திரம் தேவையில்லை, இந்த காட்சி தேவையில்லை என்று தோன்றாது. அனைத்து கதாப்பாத்திரங்களுமே முக்கியமானதாகத்தான் தோன்றும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும்.
இத்திரைப்படம் அறிவியல் புனைக் கதையில் உருவாகியிருந்தாலும், குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாகவும் இருக்கும்…” என்றார்.