தமிழ் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீ.கே.-வின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வைபவ், கருணாகரன், சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக் குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ”இந்தக் ‘காட்டேரி’ படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகேதான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பதுகூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது. இந்தப் படம் இயக்குநர் டீகே மற்றும் அவரது குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் பெரிய வெற்றி படமாக அமையும்.
டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகி, பிரபலமான பிறகு ரசிகர்கள் நாங்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
‘கே. ஜி. எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து, ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது.
‘காட்டேரி’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் டீகேவுக்கு பிறகு பொறுமையுடன் காத்திருந்த நடிகர் நடிகைகளுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பல தடைகளைக் கடந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தக் ‘காட்டேரி’ படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.