தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’.
ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசும்போது, “இது மாதிரியான திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடக்கத் துவங்கியிருப்பதில் மகிழ்ச்சிதான்.
இந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன், அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்களை நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவிலும் விநியோகம் செய்திருக்கிறேன். ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது எனக்குத் தெரியும், மணிரத்னத்தின் ‘நாயகன்’ படம் முதலில் என்னிடம்தான் வந்தது. “நான் விநியோகம் செய்ய மாட்டேன்” என்று முதலில் மறுத்தேன். அவரது அண்ணன் ஜீ.வி. “நீங்கள்தான் பண்ண வேண்டும்” என்று என்னை வற்புறுத்தினார். அதற்காகத்தான் அந்தப் படத்தை நான் விநியோகம் செய்தேன். ஆனால் அந்த ‘நாயகன்’ படத்தினால் எனக்கு லாபம் கிடைக்கவில்லை.
இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. யாரும் உதவுவதில்லை. மணிரத்னம், ரஜினி யாருமே ஜீ.வி.க்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலைதான் இப்போதும் இங்கு இருக்கிறது,
தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை. தமிழ் மக்கள்தான் என்னை வாழ வைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள்தான் பிடிக்கும். இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது. இந்தப் படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்…” என்று வாழ்த்தினார்.