Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

சாயம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய சென்சிட்டிவ் பிரச்சினையான சாதிப் பிரச்சினையை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாகியுள்ளது.

சாதி ரீதியாக தூண்டிவிடப்பட்டு கொலைகாரானாகிய ஒரு மாணவன் தன் தவறை உணர்ந்த பின்பு என்ன செய்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

பல சாதியினரும் இணைந்து வாழும் கிராமத்தில் நாட்டாமையாக இருக்கிறார் பொன்வண்ணன். இவரும் வேறொரு சாதியைச் சேர்ந்த வாத்தியாரான இளவரசுவும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இருவரின் மகன்களும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். இவர்களும் நெருங்கிய நண்பர்கள்தான். இதில் பொன்வண்ணனின் மகனான விஜய் விஷ்வாவுக்கு முறைப் பெண் நாயகியான ஷைனி. இவரும் அதே கல்லூரியில்தான் படித்து வருகிறார்.

ஷைனி விஜய்யை தீவிரமாகக் காதலித்து வருகிறார். அதேபோல் இளவரசுவின் மகனையும் வேறொரு மாணவி காதலித்து வருகிறார். இந்தக் காதல்கள் இரண்டு பக்கமும் ஒன் சைடாகாவே போய்க் கொண்டிருக்கிறது.

அதே ஊரில் பொன்வண்ணனின் சாதியைச் சேர்ந்தவரான வில்லன் ஆண்டனி சாமி பொன்வண்ணன் மீதும், அவரது தம்பியான போஸ் வெங்கட் மீதும் தனது பல விஷயங்களில் குறுக்கிடூ செய்வதாகச் சொல்லி கோபத்தில் இருக்கிறார்.

இப்போது வருடா வருடம் பக்கத்தில் இருக்கும் குவாரியை குத்தகைக்கு எடுத்து வரும் போஸ் வெங்கட்டிடம் இந்த வருடம் தனக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்கிறார் வில்லன். அதற்கு போஸ் வெங்கட் மறுக்கவே.. பொன்வண்ணன் குடும்பத்தை ஏதாவது செய்தாக வேண்டுமே என்று கோபப்படுகிறார் வில்லன்.

இந்த நேரத்தில் தனது காதலை ஏற்றுக் கொள்ளாத விஜய் விஷ்வாவிடம் பேசும்படி இளவரசுவின் மகனிடம் ஷைனி சொல்வதை வில்லன் விஜய்யிடம் மாற்றிப் பேசி தூபம் போட்டுவிட.. விஜய் விஷ்வா கோபப்பட்டு ஆத்திரம் அறிவை மறக்க.. இளவரசுவின் மகனுடன் கை கலப்பில் ஈடுபடுகிறார். இந்தச் சம்பவத்தில் இளவரசுவின் மகன் இறந்துபோக ஊரே இரண்டாக பிளவுபடுகிறது.

சிறையில் இருக்கும் விஜய் விஷ்வாவிடம் மேலும், மேலும் கொம்பு சீவ.. அவர் சிறையில் இருந்து வெளியில் வந்து கொலை மேல் கொலை செய்து தனது சாதி, சனத்திடம் நல்ல பெயர் எடுக்கிறார். ஆனால் குடும்பத்தில் இருந்து தனது மகனை நீக்கிவிடுகிறார் பொன்வண்ணன்.

இந்தக் கொலைச் சம்பவங்கள் விஜய்யை சாதி வெறியராக காட்டுகிறது.. ஒரு பக்கம் காதலி ஷைனி விஜய்யை நினைத்து அழுது கொண்டிருக்க.. விஜய்யின் அம்மாவை இழந்து பொன்வண்ணன் தனிமையில் வாடுகிறார். கடைசியாக விஜய்க்கு உண்மை நிலவரம் தெரிய வர.. ஒரு முடிவெடுக்கிறார். இதனால் என்ன நிகழ்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

விஜய் விஷ்வா தம் கட்டி நடித்துப் பார்க்கிறார். எப்படியாவது லைம் லைட்டுக்குள் வந்துவிடலாம் என்று பிடிவாதமாகத் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இவருக்கென்று ஒரு படம் அமைய மறுக்கிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. அவரவர் பிராப்தம் என்பார்கள். அல்லது நேரம் வரவில்லை என்பார்கள். இதில் ஏதோ ஒன்று..!

ஹீரோவுக்குரிய தோற்றமும், நடிப்பும் இருந்தும் சிறந்த இயக்குநர்கள் கையில் சிக்காமல் இருப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்திலும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருக்கேற்ற திரைக்கதையும், காட்சிகளும் முழுமையாக அமையாததால் முக்கியத்துவம் பெற முடியாமல் போகிறார் விஜய்.

ஆனாலும் வஞ்சகம் செய்யாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பைக் காண்பித்திருக்கிறார் விஜய். நாயகியான ஷைனிக்கு வைத்திருந்த குளோஸப் காட்சிகளால் அவர் கவனம் பெறுகிறார். காதலனை நினைத்து அவர் தன் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் பரிதாபத்தைப் பெறுகிறார். பாடல் காட்சிகளில் அழகுற காண்பிக்கப்பட்டிருக்கிறார்.

பொன்வண்ணன், சீதா, இளவரசு மூவருக்கும் சம அளவிலான காட்சிகளை ஒதுக்கி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இடையில் போஸ் வெங்கட்டும் தனது சித்தப்பா கேரக்டரையும் நல்லவன் என்ற அடையாளத்தையும் கெடாமல் நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்தவர் ஆச்சரியமாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.  மேலும் சித்தி செந்தி, அத்தை எலிசபெத், மாமாவான தென்னவன் என்று இந்த மூவரும்கூட தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

சிறையில் விஜய் விஷ்வாவுடன் இருக்கும் ஆதேஷ் பாலா தனது தனித்துவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சிறையிலேயே இருந்து விஜய்யைக் காப்பாற்ற வேண்டி அவர் செய்யும் ஒரு வேலை திடீர் டிவிஸ்ட்டாக அமைந்துள்ளது.

தொழில் நுட்பத்தில் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது இத்திரைப்படம். இன்னும் கொஞ்சம் அழகான ஒளிப்பதிவைத் தந்திருக்கலாம். கூடவே இதைவிட சிறப்பான திரைக்கதையையும், இயக்கத்தையும் கொடுத்திருந்தால் படத்தை சாதி வெறியர்களுக்கு எதிரான முதல் தர பட லிஸ்ட்டில் இதுவும் இடம் பிடித்திருக்கும்.

பல இடங்களில் வசனம் மூலமாக சாதி வெறியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வியாதிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்கத்தில் செய்த தவறை வசனம் எழுதுவதில் செய்யாமல், சிறப்பாகவே எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள்.

சாதிய மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் முதல்முறையாக இப்படித்தான் நடக்கிறது என்பதை மட்டும் சொல்லி முடித்துவிடாமல், இதற்குத் தீர்வாக தன் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சாதி வெறியனை போட்டுத் தள்ளுவதில் தப்பில்லை என்ற தீர்ப்பை இந்தப் படத்தில் முன் வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இந்தப் படத்தைப் பெரிதும் பாராட்டுகிறோம்..!

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News