Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்திருக்கும் படம் ‘வேலன்’.
இப்படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் முகேன் நாயகனாகவும், மீனாக்ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்துள்ளார். K.சரத்குமார் படத் தொகுப்பு செய்துள்ளார். சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யூ, நடன இயக்கம் – தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா, பாடல்கள் – உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக், எழுத்து, இயக்கம் – கவின்.
வரும் டிசம்பர் 31-ம் தேதியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை தி.நகரில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சூரி பேசும்போது, “சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை. முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார். ‘வலிமை’ படத்தினை விநியோகம் செய்கிறார். அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
அன்பு தம்பி கவின் ‘சிறுத்தை’ சிவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். மிக சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின்தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும்,
ஒரு இடத்தில் 500 பேர் இருந்தால் அதில் 495 பேரின் முகேனுக்குத்தான் கிடைக்கிறது. முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப் பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவனின் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது.
நாயகி மீனாக்ஷியுடன் ஏற்கெனவே ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார். அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார்.
பிரபு சார் சீனியர் ஆக்டர். ஆனால், புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார். அவருக்கு பெரிய நன்றி.
‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும்போது இயக்குநர் ‘ஷாட் ரெடி’ என சொன்னால், நாம் எழுந்திருக்கும் முன்பாகவே 35 அடி தூரம் கடந்து போயிருப்பார் ரஜினி சார். அவருக்கு அவ்வளவு எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்தக் கல்லூரியில் பார்க்கிறேன். உங்களின் பிரின்ஸிபால் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார்…” என்றார்.