வி.ஆர்.இண்டர்நேஷனல் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ஏகனாபுரம்’ ரவி தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘யாரது.’
இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நாயகன் ரவி நடித்துள்ளார். மேலும் மதுஸ்ரீ, போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய் கிருஷ்ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோருடன் மிக முக்கியமான ஒரு வேடத்தில் கே.பாக்யராஜூம் நடித்துள்ளார்.
சபேஷ் — முரளி இசையையும், ரவி சுந்தரம் கேமராவையும், கோபி கிருஷ்ணா படத் தொகுப்பையும், ‘ஆக்சன்’ பிரகாஷ் சண்டை இயக்கத்தையும், நோபல் நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கி உள்ளார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் நம்பிராஜ் பேசுகையில், “ஒரு கிராமத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரவி களம் இறங்குகிறார். ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையாகின்றனர்.
ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர விசாரணை செய்கிறார். அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் நடைபெறுகிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்..!
படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல; படம் பார்ப்பவர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும்..” என்றார் இயக்குநர் நம்பிராஜ்.
இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த தனது தனது அனுபவத்தை கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
திண்டுக்கல் , சின்னாளபட்டி மற்றும், சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.