நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமாக ‘உடன்பிறப்பே’ படம் தயாராகி வருகிறது.
நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு Doli Saja Ke Rakhna என்ற இந்திப் படத்தின் மூலமாகத் திரையுலகத்திற்குள் நுழைந்தார்.
இதற்கடுத்த ஆண்டே 1999-ம் ஆண்டு ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகத்திற்குள் பிரவேசித்தார்.
அன்று துவங்கிய அவரது நடிப்பு கேரியர் இன்றுவரையிலும் 22 வருடங்களாக நீடித்து வருகிறது.
திருமணத்திற்குப் பின்பும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜோதிகா தற்போது தனது 50-வது படத்தைத் தொட்டுவிட்டார்.
அவருடைய 50-வது திரைப்படம் அவரும், அவரது கணவரான சூர்யாவும் இணைந்து தயாரித்து வரும் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம்தான்.
இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன் ஜா ரோஸ், சூரி, ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
இசை – இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – முஜிபூர், உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி என்று வலிமை வாய்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் பட.த்தில் பணியாற்றுகிறார்கள்.
கத்துக்குட்டி படத்தை இயக்குநரான இரா.சரவணன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
அண்ணன்-தங்கை பாசத்தை மையக் கருவாகக் கொண்ட படம் என்பதால்தான் இந்தப் படத்திற்கு ‘உடன்பிறப்பே’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
கணவரான சமுத்திரக்கனிக்கும், அண்ணனான சசிக்குமாருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் தங்கை ‘மாதங்கி’யாக ஜோதிகா நடிக்கிறார்.
இதில் ஜோதிகாவின் கெட்டப் புதிய தோற்றத்தில் பார்ப்பதற்கே கிராமத்துப் பெண் போலவே தோன்றுகிறார். இரட்டை மூக்குத்தி, திருமண் பூசிய நிலையில் அவரது புகைப்படங்கள் படத்தின் நேட்டிவிட்டியை அடையாளம் காட்டுகிறது.
வெறுமனே குடும்பம், அண்ணன், தங்கை பாசம், மோதல் என்றில்லாமல் இன்றைய டிரெண்ட்டுக்கேற்ப கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் சுரண்டப்படும் கொடுமையையும் படம் பேசுகிறதாம்.
21 வருடங்களில் 50 படங்களைத் தொட்டிருக்கும் ஜோதிகாவுக்கு நமது வாழ்த்துகள்..!