பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா தடாலடியான நடிகர்தான். முரட்டு சுபாவம் மிக்கவர். பொது இடங்களில் தனது ரசிகர்களையே கை நீட்டி அடித்திருக்கிறார். அவருடைய பேச்சுகூட அப்படித்தான் இருக்கும்.
தற்போது தனது மைத்துனரும், சம்பந்தியுமான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகத்தில் யாருமே இவருடன் ஒத்துப் போக முடியாது. எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்றே தெரியாததால் இவருடன் நட்பு பாராட்டுவது மிகவும் கடினம் என்று அங்குள்ள நடிகர்களே சொல்வார்கள்.
அதோடு “தனது தந்தையான என்.டி.ராமராவ்தான் தெலுங்கு சினிமாவையே உருவாக்கியவர்…” என்று பல ஆண்டுகளாக பாலகிருஷ்ணா சொல்லி வருகிறார். இதையொட்டியே தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமராவின் சக மூத்த கலைஞர்களான நாகேஸ்வரராவ், ராமா நாயுடு போன்றோரை எப்போதும் குறிப்பிட்டே பேச மாட்டார் பாலகிருஷ்ணா. இவர்கள் இருவரின் மரணத்திற்குக்கூட அஞ்சலி செலுத்த பாலகிருஷ்ணா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஆஸ்கர் விருது வென்ற நமது தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுபடுத்தும்வகையில் பேசியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
அவர் இது குறித்து பேசும்போது, “ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் யார் என்றே எனக்கு தெரியாது. யாரோ ஒருவர் அவ்வளவுதான்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்…” என்றும் கூறியுள்ளார்.
“எந்தவொரு உயரிய விருதும் என்.டி.ராமராவ் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது…” என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானை யார் என்றே தெரியாது என்ற பாலகிருஷ்ணாவின் கூற்று பொய்யானது. அவருக்குத் தெரியாமல் இருக்கவும், அவர் பார்க்காமல் இருக்கவும் வாய்ப்பே இல்லை. ஒரு பொறுப்பான சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இப்படி பொய் பேசலாமா..?
உலக அளவில் முதன்மையான விருதினைப் பெற்றிருக்கும் ரஹ்மானை ஒரு கலைஞனாக இருந்து கொண்டே இப்படி அவமானப்படுத்தியிருப்பது கேவலமானது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட்டுகளை எழுதி வருகின்றனர்.
நடிகர் பாலகிருஷ்ணாவின் கோபத்திற்குக் காரணம் இந்திய அரசு இதுவரையிலும் என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்காததுதான்.
ஆந்திராவின் கிருஷ்ண பரமாத்மாவான நடிகர் என்.டி.ராமராவ் ‘தெலுங்கு தேசம்’ என்ற கட்சியைத் துவக்கி ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து முதலமைச்சரானார். இந்த ஒரே காரணத்துக்காக அவர் இறந்த பிறகு காங்கிரஸ் அரசு மத்தியில் பொறுப்பில் இருக்கும்வரையிலும் என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கவில்லை.
அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியும் தற்போது தெலுங்கு தேசம் கட்சி அவர்களுக்கு எதிர்ப்பாகஇருப்பதால் அவர்களும் ‘பாரத ரத்னா’ விருதினை கொடுப்பதாக இல்லை.
சமீப ஆண்டுகளாக என்.டி.ராமராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது. ஆந்திர திரைப்படத் துறையின் சார்பாகவும் இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துவிட்டார்கள். ஆனாலும், மத்திய அரசு இதற்கு இணங்கவில்லை.
இந்தக் கோபத்தில்தான் பாலகிருஷ்ணா இப்படி பொங்குகிறார் என்கிறார்கள் ஆந்திர மாநில மக்கள்.