மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் சேர்ந்து ‘அம்மா’ என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பு துவக்கப்பட்டு 27 வருடங்களாகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திய கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்வார்கள்.
கடந்த வருடம் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தில் இந்தப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இப்போது இரண்டாவது முறையாக, இந்த வருடமும் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போய்விட்டது.
கேரளாவில் பொதுக் கூட்டங்களுக்கு அந்த மாநில அரசு தற்போது தடை விதித்துள்ளது. “இதனாலேயே ‘அம்மா’ அமைப்பின் பொதுக் குழுவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை” என்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.
“ஆனால், அதே நேரம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று சங்க நிர்வாகம் கருதியுள்ளது. இதற்காக தங்களது உறுப்பினர்கள் ஊசி போட்டுக் கொள்வதற்காக ஒரு சிறப்பு முகாம் ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதற்காக இதுவரையிலும் 150 நடிகர், நடிகைகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்களாம்.
“கேரள மாநில அரசு பொதுக்கூட்டங்களை நடத்தலாம் என்று அனுமதியளித்த பின்பு ‘அம்மா’ அமைப்பின் பொதுக் குழு கூட்டம் நடத்தப்படும்…” என்று அந்த அமைப்பின் செயலாளரான நடிகர் எடவலா பாபு தெரிவித்துள்ளார்.