தெலுங்குலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் சிறப்புச் செய்தி.
தெலுங்கு திரையுலகில் விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் இயக்குநர் என்றால் அது இப்போதைக்கு சேகர் கம்முலாதன்.
1999-ம் ஆண்டில் தான் இயக்கிய ‘டாலர் டிரீம்ஸ்’ என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் இயக்குநர் சேகர் கம்முலா.
இதன் பின்பு ‘ஆனந்த்’, ‘கோதாவரி’, ‘ஹேப்பி டேய்ஸ்’, ‘அவகாய் பிரியாணி’, ‘லீடர்’, ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’, ‘அனாமிகா’, ‘பிடா’ ஆகிய விருதுகளை வாங்கிக் குவித்த படங்களை இயக்கியிருக்கிறார்.
ஒரு தேசிய விருது, 3 முறை நந்தி விருதுகள், 2 பிலிம் பேர் விருதுகள், 4 சினிமா விருதுகள், ஜீ சினிமா விருது என்று பல விருதுகளைப் பெற்ற திறமைமிக்க இயக்குநர் சேகர் கம்முலா.
இவருடைய இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது பொருத்தமான தேர்வாகத்தான் இருக்கிறது. ஏனெனில், வணிக ரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தை நாராயண் தாஸ் கே.நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி.(ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4) மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.
இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது தனுஷ் தனது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்து சென்னைக்கு வந்ததும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். அதன் பின்பு மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் பாலாஜி மோகனின் படத்திலும் அவர் நடிக்க வேண்டும். அதன் பின்புதான் இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் தெலுங்கிலும் கால் வைப்பது என்று தனுஷ் முடிவெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்..!