Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் பரபரப்பு புகார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தின் மிக மூத்த தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது, நடிகர் விஷால் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தமிழ்த் திரையுலகத்தில் மிக நேர்மையான தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர். இதுவரையிலும் 97 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

100-க்கும் மேற்பட்ட கலைஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி அவர்களுக்கு வாழ்க்கையளித்திருக்கிறார். அவர் மீது காவல் துறையில் புகாரா என்று திகைத்துப் போய் இருக்கிறது திரையுலகம்.

நடிகர் விஷால் இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்பின்போது ஆர்.பி.சவுத்ரியிடம் பல லட்சம் ரூபாய்களை கடனாகப் பெற்றிருக்கிறார். இந்தக் கடன் பரிவர்த்தினையின்போது முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் கையெழுத்திட்ட வெற்றுப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரியிடம் ஒப்படைத்திருக்கிறார் நடிகர் விஷால்.

தற்போது அந்தக் கடன் தொகையை முழுவதுமாக விஷால் கட்டி முடித்துவிட்டாராம். இது நடந்து பல மாதங்களாகியும் விஷால் கையெழுத்திட்டுக் கொடுத்த முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் வெற்றுப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரி இப்போதுவரையிலும் திருப்பித் தரவில்லையாம்.

இதற்காகத்தான் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் தி.நகர் குற்றப் பிரிவு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளாராம்.

ஆர்.பி.செளத்ரி தரப்பில் விசாரித்தபோது, “ஆர்.பி.செளத்ரியின் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றியவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர்தான் கடனாளிகள் கொடுத்திருந்த பத்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர். அவரே இறந்துவிட்டதால் தற்போது விஷால் கொடுத்த பத்திரங்கள் எங்கேயிருக்கிறது என்பது தெரியாமல் சவுத்ரியின் அலுவலகத்தில் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. அதற்குள்ளாக விஷால் அவசரப்பட்டு போலீஸில் புகார் கொடுத்துவிட்டார்…” என்கிறார்கள்.

“திரையுலகம் ஒரே குடும்பம் என்கிறார்கள். வங்கியைவிடவும் கேட்டவுடன் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக கடன் கொடுக்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.

திரையுலகத்தினருக்காக பலவித சங்கங்களும் இருக்கும்போது சங்கம் மூலமாகக்கூட பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி காவல்துறைக்குக் கொண்டு போய் பிரச்சினையை பெரிதுபடுத்தியிருப்பது தேவைதானா.. முக்கியமான இரண்டு சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் இரண்டுக்கும் தலைவராக இருந்த விஷாலுக்கு இதுகூடவா தெரியாது.. எதற்கும் கொஞ்சம் பொறுமை வேண்டும்..” என்று திரையுலகத்தினர் பலரும் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News