மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குநர் கண்ணன்.
நாயகியைப் பிரதானப்படுத்திய இந்தக் கதையில் மலையாளத்தில் நடித்தவர் நிமிஷா சஜயன். அந்தக் கதாபாத்திரமாகவே அவர் மாறிவிட்டார் என்று மலையாள சேட்டன்களும், சேச்சிகளும் இன்றுவரையிலும் நிமிஷாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
அப்பேர்ப்பட்ட முக்கியக் கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். “இவரால் அந்தக் கதாபாத்திரத்தை சுமக்க முடியுமா..? எதற்காக ஐஸ்வர்யாவை தேர்வு செய்தீர்கள்..?” என்று இயக்குநர் ஆர்.கண்ணனிடம் கேட்டதற்கு, “ஒரிஜினல் கேரக்டரைவிடவும், ரீமேக் கேரக்டரில் கூடுதல் அழுத்தத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருக்கிறார்..” என்றார்.
அவர் இது பற்றி மேலும் பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கெனவே ‘காக்கா முட்டை’, ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
அந்தப் படங்களில் அவரது பிரமிப்பான நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் இந்த நிமிஷாவின் கதாபாத்திரத்தில் நடிக்க… ஐஸ்வர்யாவைவிட்டால் தமிழில் வேறு நடிகைகளை இல்லை என்பதை உணர்ந்து அவரையே ஒப்பந்தம் செய்தேன்.
ஒப்பந்தமாவதற்கு முன்பு ஐஸ்வர்யா அந்த மலையாளப் படத்தைப் பார்த்தார். பிறகு அந்தப் படத்தில் நான் செய்யவிருக்கும் மாற்றங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்புதான் இந்தப் படத்தில் நடிக்க சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டார்.
படத்தில் சமையலறை வேலைகள்தான் பிரதான காட்சிகளாக இருக்கும். அது ஐஸ்வர்யாவுக்கு இயல்பாகவே வருகிறது. நாசூக்கான படுக்கையறைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. கதையின் ஜீவன் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் அந்தக் காட்சி தமிழிலும் இடம் பெற வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் சொன்னேன். அதற்கும் ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டு அந்தக் காட்சிகளில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இது ரீமேக் படமாகவே இருந்தாலும் ஐஸ்வர்யாவின் சினிமா கேரியரில் இதுவொரு முக்கியமான படமாக அமையும்..” என்றார் இயக்குநர் ஆர்.கண்ணன்.