Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

ஓடிடி தளங்களில் வரிசையாக வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரோனா இரண்டாவது அலையின் பரவலால் தென்னிந்திய மாநிலங்களில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.

இதனால் இந்த வாரம், அடுத்த மாதம் என்று வெளியாக வேண்டியிருந்த பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பல்வேறு தென்னிந்திய மொழி படங்கள் வரிசையாக அடுத்து வரக் கூடிய மாதங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகவும் உள்ளன.

நடிகர் மம்மூட்டி நடித்த ‘ஒன்’ என்ற திரைப்படம் நாளை ‘நெட்பிளிக்ஸில்’ வெளியாகிறது.

இதையடுத்து கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ‘ஹாட் ஸ்டாரில்’ மே 2-ம் தேதி வெளியாகிறது. தனுஷ் நடித்த ‘கர்ணன்’ மே 7-ம் தேதி அமேஸானில் வெளியாகிறது.

தனுஷ் நடித்த ‘ஜெகமே தந்திரம்’ ஜூன் 18-ம் தேதியன்று ‘நெட் பிளிக்ஸில்’ வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் ஓடிடியில்தான் வெளியாகப் போவதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அடுத்த மாதத் துவக்கத்தில் அந்தப் படம் ‘அமேஸானில்’ வெளியாகலாம் என்று தெரிகிறது.

தெலுங்கில் அனுசுயா பரத்வாஜ் நடித்த தேங்க்யூ பிரதர்’ என்ற தெலுங்கு திரைப்படம் அடுத்த மாதம் ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

‘ஆபரேஷன் ஜாவா’ என்ற மலையாளத் திரைப்படம் மே 9-ம் தேதியன்று ‘ஜீ-5’ தளத்தில் வெளியாகிறது.

வருடா வருடம் ரம்ஜான் தினத்தன்று தனது படத்தை வெளியிட்டுவிடும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இந்தாண்டுதான் தனது படத்தை தியேட்டருக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறார். இந்த முறை ‘ஜீ பிளக்ஸ்’ தளத்தில் சல்மான்கான் நடித்த ‘ராதே மோஸ்ட் வான்ட்டட்’ திரைப்படம் மே 13-ம் தேதியன்று வெளியாகிறது.

இதே நேரம் ஓடிடி தளத்திற்கு வராமல் தியேட்டருக்கு மட்டும்தான் வருவோம் என்று கங்கணம் கட்டிய சில தெலுங்கு திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’, ‘லவ் ஸ்டோரி’, ‘விராத பர்வம்’, ‘டக் ஜெகதீஷ்’ போன்ற படங்களின் வெளியீடு நாள் குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

கன்னடத் திரையுலகத்தில் அடிவி சேஷ் மேஜர்’, ‘கே.ஜி.எஃப்.-2’, மலையாளத் திரையுலகத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘குரூப்’, மோகன்லால் நடித்த ‘அராட்டு’ ஆகிய படங்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதோடு மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘மரைக்காயர்’ என்ற மலையாளத் திரைப்படமும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் சிக்கித் தவித்து வருகிறது.

தற்போது இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 12-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குள்ளாக கொரோனா லாக் டவுன் விலக்கப்பட்டுவிடும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை..!!!

ஆக, கொரோனா லாக் டவுனால் மற்றைய துறைகள் போலவே சினிமா துறையும் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

- Advertisement -

Read more

Local News