நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகக் கடைசியாக வந்திருக்கும் உறுதியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் சென்ற வருடக் கடைசியில் வெளியாகியிருக்க வேண்டியது. “தியேட்டர்களில் 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி” என்ற உத்தரவினால் சுதாரித்து பின் வாங்கியது.
பின்பு ‘மாஸ்டர்’ படம் ரிலீஸாகி அதன் ரிசல்ட்டை பார்த்த பின்பு வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். ‘மாஸ்டரின்’ ரிசல்ட் சக்ஸஸாக வர கோடை விடுமுறையில் இதனைக் கொண்டு வரலாம். அதுதான் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க சரியாக இருக்கும் என்று எண்ணி மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியிடலாம் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால் ‘டாக்டர்’ பின் வாங்கியது. இப்போது தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. இரவுக் காட்சிகளுக்கு அனுமதியில்லை.. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும் ஊரடங்கு என்று பல்வேறு தடைகள் வந்துவிட்டதால் இப்போதைக்கு தியேட்டர்களில் புதிய தமிழ்ப் படங்களுக்கு விடிவு காலம் இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது.
இதற்கு மேலும் நாம் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இந்த மாதத் துவக்கத்தில் இருந்தே ‘அமேஸான் பிரைம்’ ஓடிடி நிறுவனத்திடம் டாக்டர் தயாரிப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்திருப்பதாக திரையுலகத்தில் இருந்து செய்திகள் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 45 கோடி ரூபாயை ‘அமேஸான் பிரைம்’ நிறுவனம் ‘டாக்டர்’ படத்திற்காக அதன் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தொகை உண்மையெனில் இந்தப் படம் முழுமையாக தப்பிவிட்டது என்றே சொல்லலாம்.
வரும் மே 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் இந்த ‘டாக்டர்’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம்’ ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி தளங்களை வைத்து பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வாழும் என்பதும் உண்மையாகிக் கொண்டேயிருக்கிறது.