தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிக்கும் 31-வது படம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை நடிகர் விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தினை புதுமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார்.
புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் ‘குள்ளநரிக் கூட்டம்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த ‘தேன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இவர் சமீபத்தில் இயக்கிய ‘எது தேவையோ; அதுவே தர்மம்’ என்ற குறும் படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. இக்குறும் படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள்ளார்.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.
படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.