Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தோல்விப் படத்தின் வசனத்தில் உருவான டிக் டாக் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு படம் வெளியாகி அதிகமான மக்கள் பார்வைக்குப் போக முடியாமல் தவித்து தியேட்டர்களில் இருந்து வெளியேறிய பிறகு, அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை வைத்து டிக்டாக் செயலிகளில் வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோக்களை லட்சணக்கனக்கானோர் பார்க்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது..?

கடந்த மாதம் ‘பழகிய நாட்கள்’ என்ற தமிழ்த் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மீரான், மேகனா, செந்தில் கணேஷ், ஸ்ரீநாத், வின்சன்ட் ராய், நெல்லை சிவா, சிவக்குமார் மற்றும் சுஜாதா என பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இயக்குநர் ராம்தேவ் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் இத்திரைப்படம், காதலர்  தின  பரிசாக கடந்த பிப்ரவரி 12-ம் தேதியன்று திரைக்கு வந்தது.

புதிய கதைக் களத்தில், சின்ன பட்ஜெட் படமாக… சிறப்பான இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு வழக்கம்போல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. “சின்ன பட்ஜெட் படம்.. படத்தில் பெரிய நடிகர், நடிகைகள் இல்லை.. இதனால் இந்தப் படம் எங்களுக்கு வேண்டாம்…” என்று தியேட்டர்காரர்கள் இந்தப் ‘பழகிய நாட்கள்’ படத்திற்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டனர்.

கடைசியில் கிடைத்த சில தியேட்டர்களில் மட்டுமே ‘பழகிய நாட்கள்’ படம் வெளியானது. படம் வெளியான தியேட்டர்களிலும் ஒரு காட்சி, இரண்டு காட்சிகள் மட்டுமே கிடைத்தன. படத்தின் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்தாலும், எல்லா சின்ன பட்ஜெட் படங்களுக்கும் வரும் அதே பொருளாதாரச் சிக்கல் இந்தத் தயாரிப்பாளருக்கும் வந்தது.

இதனால் கடைசி நேரத்தில் மிக அதிகமான அளவுக்கு விளம்பரமும் செய்ய முடியாமல் போய்விட்டது. படம் பார்த்தவர்கள் “நல்லாத்தான இருக்கு.. நல்ல கருத்தைத்தான சொல்லியிருக்கு…” என்று விமர்சனங்களை முன் வைத்தாலும், இந்த விமர்சனங்கள் மற்ற ரசிகர்களின் கண் பார்வைக்கும் போக முடியாமல் போய்விட்டது.

இப்படி திரையுலகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளிலாலேயே இந்தப் படம் ஓரங்கட்டப்பட்டாலும், மலேசியாவில் இந்தப் படம் வேறுவிதமான ஒரு பரபரப்பை உண்டு செய்துள்ளது.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நாயகி, நாயகனிடம் “ஒரு பத்து நாளைக்கு நான் உனக்கு மனைவியா உன் வீட்டுக்கு வந்து தங்குறேன்.. ஆனால் அதுக்கப்புறம் நீ யாரோ.. நான் யாரோ.. அவங்கவங்க அவங்க வேலையைப் பார்த்திட்டுப் போயிரணும்..” என்று சொல்லுவார்.

இந்த ஒரு டயலாக்கை வைத்து மலேசியாவில் வசிக்கும் பல இளம் பெண்கள் டிக்டாக்கில் வீடியோக்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். இதில் பல வீடியோக்களின் பார்வைகள் லட்சத்தைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறதாம்.

தமிழகத்தில் மக்கள் பரவலாக பார்க்க முடியாத ஒரு படத்தின் வசனத்தை வைத்து உருவான காட்சிகளை இப்போது உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் வீடியோவில் பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இப்போது, இன்னொரு ஊர் தியேட்டரில் படத்தைப் போடுவதற்கு க்யூப் கட்டணத்தைக் கட்டக் கூட வழியில்லாமல் தவிக்கிறார் என்பதுதான் விந்தையான விஷயம்.

- Advertisement -

Read more

Local News