கடந்த 2019-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ‘அசுரன்’ திரைப்படம் தமிழில் சிறந்த படமாகவும், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும், இந்தப் படத்தை இயக்கியிருந்த இயக்குநர் வெற்றி மாறன் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்த இந்தப் படம் எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
இந்த தேசிய விருது அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடினார்கள். தனுஷ் இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருப்பதால் அவரது ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் நடிகர் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
“அனைவருக்கும் வணக்கம்,
‘அசுரனுக்கு’ மதிப்புமிக்க தேசிய விருது வழங்கப்பட்டது என்ற அற்புதமான செய்தியைக் கேட்டு நான் எழுந்தேன். சிறந்த நடிகருக்கான விருதை வெல்வது ஒரு கனவு, இரண்டை வெல்வது ஆசீர்வாதத்திற்கு குறைவில்லாதது. நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்ததில்லை.
நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரைக் குறிப்பிடுகிறேன். எப்போதும் போல நான் முதலில் என் தாய் மற்றும் தந்தைக்கு நன்றி கூறுகிறேன், என் குரு என் சகோதரர். ‘சிவசாமி’யை எனக்குக் கொடுத்த வெற்றி மாறனுக்கு நன்றி.
வெற்றி, பாலு மகேந்திரா சாரின் அலுவலகத்தில் நான் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் ஒரு நண்பராகவும், தோழராகவும் மற்றும் சகோதரராகவும் மாறுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் ஒன்றாக பணியாற்றிய நான்கு படங்கள், ஒன்றாக தயாரித்த இரண்டு படங்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் என்னை மிகவும் நம்பியதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்ததாக எனக்கு நீங்கள் எழுதியதைக் கேட்க காத்திருக்க முடியவில்லை. பெரிய அணைப்பு.
இந்த விருதுக்கு நான் தேசிய விருது ஜூரிக்கு மனமார்ந்த நன்றி கூறுகிறேன். எனது தயாரிப்பாளர் தாணு சாரின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி.
முழு ‘அசுரன்’ குழுவினருக்கும், குறிப்பாக எனது குடும்பத்தினர் அன்பான பச்சையம்மா மஞ்சு, எனது சிதம்பரம் கென், மற்றும் எனது முருகன் டீஜே ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
‘வா அசுரா’ பாடலை தந்த ஜி.வி-க்கு நன்றி. அனைத்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும், சமூக ஊடகங்களின் ஆதரவுக்கும், அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி. எனக்கு வாழ்த்து சொல்ல நேரம் ஒதுக்கிய எனது திரையுலக நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் நன்றி.
இறுதியாக எனது ரசிகர்களுக்கு எனது பலத்தின் தூண்களுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுக்கும் நிபந்தனையற்ற அன்புதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. போதுமான நன்றி சொல்ல முடியாது. நான் உங்கள் அனைவரையும் நிலவுக்கு பிறகும் நேசிக்கிறேன். தயவு செய்து அன்பைப் பரப்புங்கள், வேறு எதுவும் இல்லை…” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.