நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.
இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம்.
இந்த நடிகர் சங்கப் பிரச்சினையின்போதுதான் எனக்கும் அவருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டது. ஒரு விழா மேடையில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து அத்தனை பேரையும் அவர்கள் வகிக்கும் பதவியைச் சொல்லி அழைத்தார். ‘இயக்குநர்கள் சங்கத் தலைவர் அவர்களே’.. ‘பெப்சியின் தலைவர் அவர்களே’.. என்றெல்லாம் அழைத்துப் பேசியவர், என்னை மட்டும் ‘ராதாரவி அவர்களே’ என்று மட்டும் சொல்லி அழைத்தார்.
இதைக் கேட்டபோது எனக்குள் சுருக்கென்றானது. கோபம் வந்தது. அதே மேடையில் நான் பேசும்போது ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே’.. ‘சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களே’ என்றெல்லாம் இருக்கிற நடிகர்களையெல்லாம் அவர்களுடைய பட்டப் பெயர் சொல்லி அழைத்துவிட்டு கமல்ஹாசனை மட்டும் ‘கமல்ஹாசன் அவர்களே’ என்று மட்டும் குறிப்பிட்டேன்.
அந்த விழா முடிந்து கீழே இறங்கும்போது கமல் என் கையைப் பிடித்து இழுத்து ‘மத்தவனெல்லாம் சூப்பர் ஸ்டாரு.. நான் மட்டும் கமல்ஹாசனா..?’ என்று கேட்டார். ‘அப்போ மத்தவனெல்லாம் சங்கத் தலைவருங்க.. நான் மட்டும் சாதாரண ராதாரவியா..?’ என்று கேட்டேன். ‘நான் உன் பிரெண்ட்டுடா’ என்றார். ‘அதுனாலதான் நானும் சாதாரணமா கூப்பிட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.
இதற்குப் பிறகு கமலுடன் நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்து, கடைசியாக நடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கமல்ஹாசனின் படங்களில் நாசர் நடித்த கேரக்டர்களில் நான்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், கமலுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைகளினால்தான் அவர் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுக்கவில்லை.
இதன் பிறகு ரோட்டரி கிளப் சார்பா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ‘சிவாஜி’ ராம்குமாரின் அழைப்பின்பேரில் நாங்களெல்லாம் மதுரைக்கு ரயிலில் சென்றோம். எங்களுடன் கமலும் வந்தார்.
அப்போது நானும் கமலும் மட்டும் கொஞ்ச நேரம் தனியா பேசினோம். அப்போது, “ஏன்.. ஒய்.ஜி.மகேந்திரனை இப்பல்லாம் கூப்பிடுறதே இல்லை. அவர் நல்ல நடிகர்ய்யா.. அவரைக் கூப்பிட்டு நடிக்க வைய்யா…” என்று கேட்டுக் கொண்டேன். அப்போது “என்னைய மட்டும் உன்கூட நடிக்க வைச்சுப் பாரு.. உன்னை ஏறி மிதிச்சிருவேன்…” என்று கமலிடம் அப்போதே சவால்கூட விட்டேன்.
ரஜினிதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கொடுத்திருக்கார். கமல் கொடுக்கலை. ஆனாலும், கமலின் புகைப்படங்கள்தான் என் வீட்டில் அதிகமாக இருக்கும்.
கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர். சிவாஜிக்குப் பிறகு நான் பெரிதும் மதிக்கும் நடிகர்ன்னா அது கமல்தான். ஆனால் கமல் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அத்தாரிட்டி கிடையாது. அவர் மட்டுமே தமிழ் சினிமாவுக்கான டிக்சனரி கிடையாது.. தமிழ்ச் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் அவ்வளவுதான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.