“முதல் படம் என்பது தாய், தந்தையர் மாதிரி. அதை மாத்தியெல்லாம் பேசக் கூடாது…” என்று அறிமுக நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார் நடிகை ஊர்வசி.
முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குழலி’. இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆரா நடித்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் விக்னேஷ் பேசும்போது, “என்னை அனைவரும் இப்போது காக்கா முட்டை விக்னேஷ் என்று அழைக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த பின்பு நிச்சயமாக குழலி விக்னேஷ் என்றுதான் என்னை அழைப்பார்கள்..” என்று பேசினார்.

இதன் பின்பு பேச வந்த நடிகை ஊர்வசி, இதைக் குறிப்பிட்டு, “ஹீரோ தம்பி இனிமேல் தன்னுடைய பெயர் மாறும் என்று பேசினார். இது ரொம்பவும் தப்பு. அதுபோல் பேசவே கூடாது. முதல் திரைப்படம் என்பது நடிகர், நடிகைகளுக்கெல்லாம் அம்மா, அப்பா மாதிரி. அதை மாத்தவே முடியாது. மாத்தவும் கூடாது.
இந்தத் தம்பி இப்படி பேசினதை அந்தப் படத்தோட இயக்குநர் கேட்டால் அவர் மனசு என்ன பாடுபடும்..? அதுவும் அந்த இயக்குநர் எப்பேர்ப்பட்ட இயக்குநர்.. அந்த மாதிரி ஐடியால்லாம் எப்படி அவருக்கு வந்துச்சுன்னே தெரியலை. நேர்ல அவரைப் பார்த்தால் அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும்ன்னு தோணுது. அப்படிப்பட்ட படத்தைப் போய் மாத்தியெல்லாம் பேசக் கூடாது. மனசுக்குள்ளேயே இதுக்கு மன்னிப்பு கேட்டுக்குங்க. அதான் நல்லது..” என்று நாயகன் விக்னேஷூக்கு அட்வைஸ் செய்தார் நடிகை ஊர்வசி.